திரையரங்கில் தேசியகீதம்... விதிமுறையில் நீதிபதிகள் திருத்தம்

சனி, 10 டிசம்பர் 2016 (16:31 IST)
சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, அமிதவராய் அடங்கிய அமர்வு, சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும். அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.


 
 
இந்த வழக்கு விசாரணையில் அட்டார்னி ஜெனரல் முகுல்ரோஹத்கி, இந்த உத்தரவு தொடர்பான வழிகாட்டுமுறையை 10 நாட்களுக்குள் அனுப்புவதாகவும், மாற்றுத்திறனாளிகள் எப்படி மரியாதை செலுத்த முடியும் என்றும் கூறினார்.
 
அதற்கு நீதிபதிகள், சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை. அதற்கு ஈடான வகையில் அவர்கள் உரிய மரியாதை செலுத்தினால் போதும் என்றனர்.
 
அதேபோல டெல்லியில் உள்ள தியேட்டரில் நடந்த விபத்தை டெல்லி மாநகராட்சி குறிப்பிட்டு இருந்தது. அதன்படி தியேட்டரில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது கதவுகள் பூட்டப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் திருத்தம் செய்தனர். இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 14 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்