நல்ல படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை: ‘ஜவான்’ படத்தை மறைமுகமாக தாக்கும் சுரேஷ் காமாட்சி..!
வியாழன், 7 செப்டம்பர் 2023 (11:15 IST)
இன்று ஜாவான் திரைப்படம் தமிழகத்தில் கிட்டத்தட்ட 600 திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் நாளை வெளியாகும் தமிழ்க்குடிமகன் உட்பட சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது
வருடம் என்றிருந்தது மாதங்களாகிவிட்டது. மாதங்கள் குறுகி வாரங்களாகிவிட்டது. மாதங்களும் குறுகி நாட்களாகிவிட்டன.
நான் ஏதோ நாட்காட்டி குறித்துப் பேசவில்லை. திரையரங்கங்களில் நாம் வெளியிடும் சினிமாவின் ஆயுட்காலம் இது.
நூற்றாண்டுகள் வாழும் என நினைப்பது புற்றீசலின் ஒற்றை நாள் வாழ்க்கை முறைக்குத் தள்ளப்பட்டுவிட்டது சிறிய படங்களின் வெளியீடு.
900 திரையரங்குகள் இருந்தும் சிறிய படங்களுக்கான திரைகள் கிடைப்பதில்லை. படம் சுமாராக இருந்தால் பரவாயில்லை. திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும் விமர்சன ரீதியாக நல்ல படம் என அனைவரும் உரக்கச் சொல்லியிருக்கும் படங்களுக்கும் இந்நிலைதான்.
இவ்வளவு அழகாக நேர்த்தியாக ஒரு படம் செய்ய முடியுமா? எனப் பார்த்தவர்கள் ஆச்சர்யப்படும் படத்திற்கே கூடுதல் திரையரங்குகள் கிடைக்காதது வருத்தமளிக்கிறது.
காரணம் அண்ணன் திருப்பூரார் சொன்னது போல நான்காயிரம் திரைகள் இன்று 900 க்குள் குறைந்ததுதான். திரைகளும் குறைந்துவிட்டது. ஓடும் நாட்களும் குறைந்துவிட்டது.
ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறு படங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது.
நல்ல படத்தையும் எடுத்துவிட்டு சரியான திரையரங்கில் வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல முடியாமல் நிர்க்கதியாக நிற்பதே சிறுபடங்களின் வாடிக்கையாகிவிட்டது.
இதை சரிசெய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
வெளியீட்டு முறையை ஒழுங்குபடுத்துவதின் மூலமும்.. சிறு திரைகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவதின் மூலமும் இதை சரிசெய்யலாம்.
இன்று 7 படங்கள் வெளியீடு. இதில் நான்கு படங்களை அடுத்த வாரத்திற்கு கடத்தியிருந்தால் கூட மற்றவர்களுக்கு தேவையான திரையரங்குகள் கிடைத்திருக்கும்.
நீங்கள் நகர்த்தியிருக்கலாமே என்றால்.. ஒரு வாரம் நகர்த்தியாயிற்று. மீண்டும் நகர்த்துவது சாத்தியமற்றது.
ஆயிரம் பேர் அமரும் திரையரங்குகள் பல நாட்கள் காத்து வாங்குது. அவற்றை இரண்டாகவோ மூன்றாகவோ மறுசீரமைத்துக் கொண்டால் திரைப் பஞ்சத்தை ஒழித்துவிடலாம். கிட்டத்தட்ட 1800 திரைகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
அதற்கு எல் பி ஏ என்ற அனுமதியும் பெற வேண்டும் என்ற சட்டத்தை விலக்கி அரசு உதவ வேண்டும். பொதுப்பணித்துறையிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதும் என்ற நிலையை அரசு முன்னுவந்து செய்ய வேண்டும்..
அதன்மூலம் திரையுலகம் மாற்றம் பெற மிகப் பெரிய வாய்ப்புள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்துத் திரையுலகமும் ஒற்றுமையுடன் ஒன்று கூடி இந்நிலை மாற முயற்சி எடுக்க வேண்டும். முதல்ரை அணுகி கோரிக்கை வைக்க வேண்டும். திரையுலகைக் காக்க வேண்டும்.
பெரிய படங்கள் வெளியாவதும்... பெரு வெற்றி பெறுவதும் வசூல் சாதனை செய்வதும் அவசியமானது... யானை கம்பீரமாக நடக்கும் போது அதன் குட்டியும் அதன் நிழலில் நடந்தாக வேண்டும்.
Edited by Mahendran
அரசும் திரைத்துறையும் சிறிய படங்களின் உயிர் காக்க அவசர ரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.