அமரன் படம் வரும் தீபாவளிக்கு வெளியிடப்பட உள்ளதாக இருந்தாலும், டிரைலர் வெளியானவுடன் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வீர வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் அமரன் திரைப்படம், தேசப்பற்றை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளதால், இது பார்வையாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.
சென்சார் குழுவின் பார்வைக்கு பிறகு, அமரன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் ரன்னிங் டைம் 168 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஆகும். படம் மூன்று மணி நேரத்திற்கு நெருங்கியுள்ள நிலையில் ரிலீசுக்கு பின் நீளம் குறைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவரவுள்ள இந்த படம், சிவகார்த்திகேயனின் முதல் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், சாய் ஒளிப்பதிவில், கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.