பாகிஸ்தானில் ஷோலே - ரசிகர்கள் குஷி

திங்கள், 20 ஏப்ரல் 2015 (14:14 IST)
தர்மேந்திரா, அமிதாப்பச்சன், ஹேமமாலினி, சஞ்சீவ்குமார் இணைந்து நடித்த இந்திப் படம் ‘ஷோலே’. இப்படம் 1975–ல் இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. வசூல் சாதனையும் படைத்தது. பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின. ரமேஷ் சிப்பி இப்படத்தை இயக்கியிருந்தார். 
 

 
‘ஷோலே’ படம் பாகிஸ்தானில் அப்போது வெளியாகவில்லை. தற்போது 40 வருடங்களுக்கு பிறகு அப்படம் பாகிஸ்தான் தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது. இதற்கான சிறப்பு காட்சி கராச்சியில் உள்ள தியேட்டரில் திரையிடப்பட்டது. பிரபலங்கள் பலர் நேரில் வந்து படம் பார்த்தனர். 
 
‘ஷோலே’ படத்துக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்திய படங்களுக்கு அங்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தபோதே பலர் வி.சி.ஆரில் திருட்டுத்தனமாக இப்படத்தை பார்த்து உள்ளனர். எனவே தியேட்டர்களில் இந்த படத்தை பார்க்க நிறைய கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பாகிஸ்தான் விநியோகஸ்தரான நதீம் கூறும் போது, ‘ஷோலே’ படம் பாகிஸ்தானில் நல்ல வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்