பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில், பிளஸ்ஸி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் என்ற திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கூறியிருப்பதாவது:
பிளெஸ்சி சாரும் பின்னே நானும்
சுப்ரமணியபுரம் மலையாளத் திரைக்கதை வெளியீட்டு விழாவில் கிடைத்தது அவருடைய நட்பு. திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் எனது ஈசன் திரைப்படத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்தார். அப்பொழுதிருந்தே ஆடு ஜீவிதத்தின் கதையை மனதில் சுமந்து கொண்டிருந்தார். பெரும்பாரமென அக்கதை அவரது இதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. இத்தனை வருடம் கழித்து தனது பாரத்தை நமது இதயத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்.
திரைப்படத்தின் ஒற்றை வரியாக பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற குரல் எனக்குள் ஒலிப்பதைப் போல இருந்தது. பிருத்விராஜ் அக்குரலைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். மனதையும் உடலையும் ஒப்புக் கொடுத்திருக்கிறார். பின்னணியில் முன்னணியாக ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்தியிருப்பது மாபெரும் பேரிசை. எவரும் மறக்க முடியாத மறுக்க முடியாத பெருவெள்ளம்.