‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கெசாண்ட்ரா. அந்தப் படமும் சரி, அதற்குப்பின் வெளியான ‘அழகிய அசுரா’ படமும் சரி… இரண்டுமே சரியாக ஓடாததால், கன்னடா மற்றும் தெலுங்குப் பக்கம் கவனத்தைச் செலுத்தினார். இதில், தெலுங்கில் அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அவ்வப்போது தமிழிலும் நடித்து வந்தார்.
இந்த வருடத்தில் வெளியான ‘மாநகரம்’ படம்தான், தமிழில் அவருக்கென்று நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. அதன்பிறகு, ‘சரவணன் இருக்க பயமேன்’ மற்றும் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ என இந்த வருடத்திலேயே இதுவரை 3 படங்கள் ரிலீஸாகிவிட்டன. அடுத்ததாக, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.
அத்துடன், விஷ்ணு ஜோடியாக ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ராஜதந்திரம்’ பார்ட் 2, வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ ஆகிய படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். இதில், ஓரிரு படங்களாவது இந்த வருடத்திற்குள் ரிலீஸாகிவிடும். எனவே, ஒரே வருடத்தில் அதிகம் படங்களில் நடித்தவர் என்ற பெருமை ரெஜினாவுக்கு கிடைக்கப் போகிறது.