ஐஸ்க்ரீம் 2 - வர்மா வர்றார்... எல்லோரும் பாதுகாப்பான இடத்துக்கு ஓடுங்க...

சனி, 22 நவம்பர் 2014 (08:58 IST)
ராம் கோபால் வர்மா என்று எழுதிக் காட்டினாலே தெலுங்கு திரையுலகம் டெரராகிறது. ஐஸ்க்ரீம் என்று ஒரு படத்தை முடித்து சில மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டிருக்கிறார், ஐஸ்க்ரீம் 2.
 
ஐஸ்க்ரீம் இந்த வருடம் ஜுலையில் வெளியானது. அதன் பிறகு நவம்பர்வரை நான்கு மாதங்களில் இரு தெலுங்குப் படங்களை இயக்கி வெளியிட்டார். XES என்ற இந்திப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீதேவி என்ற தெலுங்குப் படத்தையும் தொடங்கியுள்ளார். அத்துடன் ஐஸ்க்ரீம் 2 -வையும் வெளியிட்டுள்ளார். அதாவது நான்கு மாதத்தில் நான்கு படங்களை இயக்கி வெளியிட்டிருக்கிறார்.
 
சரி, ஐஸ்க்ரீம் 2 எப்படி? ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஃபேக்டரில் குறும்படம் எடுக்க சில இளைஞர்கள் வருகிறார்கள். அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்யமான சில நிகழ்வுகள்தான் படமாம். டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் போனவர்கள் தலைதெறிக்க ஓடிவருவதாக ஆந்திராவில் அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.
 
ரிஸ்கான சப்ஜெக்ட்களை படமாக எடுத்தவர் வர்மா. இப்போது அவரது படத்தைப் பார்ப்பதே பெரிய ரிஸ்க்காக மாறியிருக்கிறது. 
 
எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே.

வெப்துனியாவைப் படிக்கவும்