இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் வெளியீட்டுக்கு தயாராக உள்ள படங்களும் தியேட்டர் திறக்கப்படாததால் வெளியிட முடியாத இக்கட்டில் சிக்கியுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் நஷ்டமடைந்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு பிறகு நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு நடிகர்கள், நடிகைகள் தங்கள் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் சம்பளத்தை குறைத்து கொள்ள தானகவே பல ந்டிகர்கள் முன் வந்துள்ளனர்.
நடிகர் விஜய் ஆண்டனி தான் நடிக்கும் படங்களில் சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து நாசரும் தான் படங்களில் நடிக்க வாங்கும் சம்பளத்தில் 15% குறைத்துக் கொள்வதாக கூறியிருந்தார். அதுபோலவே நடிகர் ஹரிஷ் கல்யாண், அருள்தாஸ், மகத், ஆகியோரும் சம்பளத்தை குறைத்து கொள்வதாக கூறியுள்ளனர்.
தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சம்பளத்தில் 50% குறைத்து கொள்ள தாமாக முன் வந்துள்ளார். இந்தி, தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் அதிகமாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது 1.20 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அதை குறைத்து 75 லட்சம் சம்பளம் பெற அவர் சம்மதித்திருப்பதாய் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ரகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.