வாத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் பரிச்சயம் ஆகியுள்ளார் சம்யுக்தா. இவர் ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் கூடுதல் கவனத்தை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் வாத்தி படம் பற்றி பேசியுள்ள சம்யுக்தா வாத்தி திரைப்படம் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசுகிறது. மேலும் தன் பெயருக்குப் பின்னால் மேனன் என்ற சாதி பெயர் குறித்து கூறிய அவர் “வாத்தி படத்தில் அந்த பெயர் இருக்காது. சாதி அடையாளத்தை போட்டுக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாதியிலும் உடன்பாடு இல்லை. என்னை சம்யுக்தா என்று அழைத்தாலே போதும்” எனக் கூறியுள்ளார்.
இப்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் சம்யுக்தாவைப் பற்றி அவர் நடித்த எடக்காடு பட்டாலியன் படத்தின் தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் புகழ்ந்து பேசியுள்ளார். அதில் “என் படத்தில் நடிக்க அவருக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 65 சதவீதத்தை மட்டுமே என்னால் கொடுக்க முடிந்தது. ஆனால் அதை பற்றி கவலை கொள்ளாமல் அவர் எனக்கு எல்லா பணிகளையும் முடித்துக் கொடுத்தார். படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதனால் சம்பளம் வேண்டாம் என சொல்லிவிட்டார். அவர் முன்பாக நான் தலைவணங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.