’800’ பட சர்ச்சை: தயாரிப்பு நிறுவனம் விளக்க அறிக்கை!

புதன், 14 அக்டோபர் 2020 (19:44 IST)
விஜய்சேதுபதி நடிக்கவுள்ள 800 திரைப்படம் அரசியலாக்கப்பட்டு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
 
முத்தையா முரளிதரன்‌ வாழ்க்கை வரலாறில்‌ விஜய்‌ சேதுபதி நடிக்க இருக்கும்‌ 800 திரைப்படம்‌ பல்வேறு வகையில்‌ அரசியல்‌ ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம்‌. 800 திரைப்படம்‌ முழுக்க ஒரு கிரிக்கெட்‌ வீரரின்‌ வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில்‌ எந்த வித அரசியலும்‌ கிடையாது. தமிழகத்தில்‌ இருந்து தேமிலைத்‌ தோட்டக்‌கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில்‌ இருந்து வந்த:
முரளிதரன்‌ எப்படி பல தடைகளைத்‌ தாண்டி உலக அளவில்‌ சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார்‌ என்பது தான்‌ இத்திரைப்படத்தின்‌ கதையம்சம்‌. 
 
இத்திரைப்படம்‌ இளைய சமுதாயத்துக்கும்‌ வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும்‌ தங்கள்‌ வாழ்க்கைப்‌ பயணத்தில்‌ எவ்வளவு தடைகள்‌ வந்தாலும்‌ தடைகளைக்‌ கடந்து சாதிக்க முடியும்‌ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும்‌ படமாக இருக்கும்‌. இத்திரைப்படத்தின்‌ தயாரிப்பாளராக ஒன்றை மட்டும்‌ நிச்சயமாக சொல்ல முடியும்‌ இத்திரைப்படத்தில்‌ ஈழத்தமிழர்களின்‌ போராட்டத்தை சிறுமைப்படுத்தும்‌ விதத்திலான காட்சியமைப்புகள்‌ கிடையாது. கூடுதலாக இத்திரைப்படத்தில்‌ இலங்கையை சேர்ந்த பல தமிழ்‌ திரைத்துறை கலைஞர்கள்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கலைஞர்கள்‌ பங்குபெற இருக்கின்றனர்‌. அதன்‌ மூலம்‌ இலங்கை தமிழ்‌ திரைத்துறை கலைஞர்களுக்கு தங்கள்‌ திறமையை உலக அரங்கில்‌ வெளிக்‌ காட்ட இந்த படம்‌ நிச்சயமாக ஒரு அடித்தளமிட்டுத்‌ தரும்‌ என்பதை நாங்கள்‌ முழுமையாக நம்புகிறோம்‌. 
 
கலைக்கும்‌ கலைஞர்களுக்கும்‌ எல்லைகள்‌ கிடையாது . எல்லைகளை கடந்து மக்களையும்‌ மனிதத்தையும்‌ இணைப்பது தான்‌ கலை. நாங்கள்‌ அன்பையும்‌ நம்பிக்கையும்‌ மட்டுமே விதைக்க விரும்புகிறோம்‌.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்