தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரவீன் காந்தின் வாட்ஸ்-அப்

செவ்வாய், 31 மார்ச் 2015 (16:38 IST)
இன்றைய தேதிக்கு என்ன விலை போகும் என்பதைப் பார்த்து படம் பண்ணும் பக்கா வியாபாரிகளில் ஒருவர், பிரவீன் காந்த். ஈழத்துக்கு நல்ல மார்க்கெட் இருப்பதை அறிந்து, பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் படுகொலையை புலிப்பார்வை என்ற பெயரில் படமாக்கினார்.
 
அந்தப் படம் எதிர்ப்புகளை சந்தித்த போது தமிழ், தியாகம், புடலைங்காய் என்று தத்துவம் பேசியதோடு தனது பெயரை பிரவீன் காந்தி என்று மாற்றி வைத்துக் கொண்டார். என்னதான் விலை போகிற பண்டமாக இருந்தாலும், குறைந்தபட்சம் அதனை நன்றாக பேக் செய்யவேனும் தெரிய வேண்டுமே. அந்தத் திறமை இல்லாததால் புலிப்பார்வை படுதோல்வியடைந்தது.
 
தமிழ், தியாகம், ஈழம் ஆகியவற்றுடன் காந்திக்கும் கல்தா தந்து, பிரவீன் காந்த் என்ற பெயரில் அடுத்தப் படத்தை தொடங்குகிறார். படத்தின் பெயர் வாட்ஸ்-அப். இன்றைய இளைஞர்கள் வாட்ஸ்-அப்பை அதிகம் பயன்படுத்துவதால், அதனை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுக்கிறாராம். 
 
புதுமுகங்களுடன் பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். வாட்ஸ்-அப் மாதிரி இன்றைக்கு விற்பனையாகும் ஒரு விற்பனை பொருள்தான் பிரவீன் காந்துக்கு ஈழமும் என்பதை அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் இப்போதாவது உணர்ந்தால் நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்