மறதி ஒரு தேசிய வியாதி: பிரசன்னாவின் டுவிட்டுக்கு பதிலளித்த சேரன்

ஞாயிறு, 5 ஜூலை 2020 (19:43 IST)
பிரசன்னாவின் டுவிட்டுக்கு பதிலளித்த சேரன்
கடந்த சில நாட்களுக்கு முன் தந்தை மகன் ஆகிய இருவர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் சம்பவமும், செங்கல்பட்டு அருகே சசிகலா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக உள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற அடுத்தடுத்த சம்பவங்களால் முந்தைய சம்பவங்களை நாம் மறந்து விடுகிறோம் என்பதை குறிக்கும் வகையில் நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
’ஜெயலலிதா அல்லது ஜெயராஜ் அல்லது ஜெயப்பிரியா அடுத்த பரபரப்பான மரணம்/ கொலை/ கற்பழிப்பு செய்திகள் அடுத்த செய்தி வெளிவரும் வரை மட்டுமே. அதன் பின்னர் செய்திகளும் மாறுகிறது, ஹேஷ்டேக்குகளும் மாறுகிறது. ஆனால் உண்மையில் மாறவேண்டியது மட்டும் ஒருபோதும் மாறாமல் இருப்பது பெரும் சோர்வை அளிக்கிறது. மறதி ஒரு தேசிய வியாதி’ என்று பதிவு செய்துள்ளார்.
 
 இந்த டுவிட்டை பதிலளித்த இயக்குனர் சேரன் கூறியிருப்பதாவது: மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல மறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு...  எல்லாவற்றையும் அடுத்த செய்தியில் மறந்துவிடுவான் என்ற நம்பிக்கையால்தான் இத்தனை காலம் நடந்த அத்தனை பட்டாபிஷேகங்களும் நடத்தப்பட்டது’ என்று கூறியுள்ளார்.
 
இந்த இரண்டு டுவிட்டுக்களும் தற்போது வைரலாகி வருகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்