முடிந்தது சென்னை பில்ம் பெஸ்டிவல் – விருது பெற்ற 96, பரியேறும் பெருமாள் !

வெள்ளி, 21 டிசம்பர் 2018 (08:29 IST)
நடைபெற்று முடிந்த 16 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 96, பரியேறும் பெருமாள் ஆகியப் படங்கள் சிறந்த தமிழ்ப் படங்களாக தேர்வு செய்யப்பட்டன.

16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 13 ம் தேதி சென்னையில் தொடங்கி கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்தது.  இந்த திரைப்பட விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.  சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் ஆகிய 6 அரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன.

இந்த விழாவில் சிறந்த தமிழ்ப் படங்கள் பிரிவில் ‘96’, ‘அபியும் அனுவும்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜீனியஸ்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்க்குரி’, ‘பரியேறும் பெருமாள், ‘ராட்சசன்’, ‘வடசென்னை’, ‘வேலைக்காரன்’ ஆகிய 12 படங்கள் திரையிடப்பட்டன. மேலும் சிறப்புத் திரையிடலாக ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரையிடப்பட்டது

நேற்றோடு முடிந்த இந்த விழாவில் சிறந்த தமிழ்ப்படத்துக்கான விருது பரியேறும் பெருமாள் படத்துக்கு வழங்கப்பட்டது. அப்படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு விருதும் பணமும் வழங்கப்பட்டது.

அதேப்போல மற்றொரு சிறந்த திரைப்படமாக 96 தேர்ந்தெடுக்கப்பட்டு அப்படத்தின்ன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு விருது வழங்கப்பட்டது. நடுவர் குழுவின் சிறப்புப் பரிசாக வடசென்னைப் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கு விருது வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்