மிஸ்டர் லோக்கல்: திரைவிமர்சனம்

வெள்ளி, 17 மே 2019 (13:52 IST)
ஒரு பணக்கார பெண் முதலாளிக்கும், ஒரு நடுத்தரவர்க்க லோக்கல் பையனுக்கும் இடையே நடக்கும் ஈகோ, காதல், மோதல் பிரச்சனைதான் படத்தின் ஒன்லைன் கதை. இதே கதையை 'மன்னன்' உள்பட பல படங்களில் பார்த்துவிட்டோம் என்பது குறிப்பிடத்தக்கது
 
சிவகார்த்திகேயனும் ராதிகாவும் பைக்கில் செல்லும்போது எதிரே வரும் நயன்தாராவின் கார் மோதுகிறது. இங்கே ஆரம்பிக்கும் மோதல் படத்தின் இறுதி வரை தொடர்கிறது. இந்த மோதலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை இயக்குனர் ராஜேஷ் எம் தனது பாணியில் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படம் தான் மிஸ்டர் லோக்கல்
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் எந்தவித வித்தியாசமும் இல்லை. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இருந்து அதே சிரிப்பு, அதே காமெடி, அதே கொஞ்சல், அதே மோதல். இப்படியே போனால் ரொம்ப கஷ்டம். வித்தியாசமாக ஏதாவது செய்ய சிவகார்த்திகேயன் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை, அதற்கு இயக்குனரும் கதையில் இடம் கொடுக்கவில்லை என்பது ஏமாற்றமே
 
படத்தில் ஒரு ஆறுதல் நயன்தாரா மட்டுமே. அதிலும் நடிப்பில் பெரும் ஏமாற்றம். விதவிதமான காஸ்ட்யூம், கலர்புல் பாடல் காட்சிகள், கெத்து, திமிர், 'மன்னன்' விஜயசாந்தி நடிப்புக்கு இணையாக நடிப்பு என தனது பங்கை சரியாக செய்துள்ளர் நயன்தாரா.
 
சதீஷ், ரோபோசங்கர், யோகிபாபு, தம்பிராமையா என ஒரு காமெடி கூட்டமே இருந்தும் காமெடியில் படு வறட்சி. சந்தானம் இடத்தை இத்தனை பேர் சேர்ந்தும்  நிரப்பமுடியவில்லை. 
 
ராதிகாவின் வெகுளித்தனமான நடிப்பை பாராட்டலாம். குறிப்பாக சிவகார்த்திகேயனிடம் கோபப்படும் காட்சியில் அவரது அனுபவ நடிப்பு வெளிப்படுகிறது.
 
ஹிப்ஹல் தமிழா ஆதியின் இசையில் ஒரு பாடல் கூட தேறவில்லை. இருப்பினும் பாடல் காட்சிகள் நயன்தாரா மற்றும் அழகான லோகேஷனில் தேறிவிடுகிறது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும் ஓகே ரகம்
 
இயக்குனர் ராஜேஷ் எம் தனது முந்தைய படங்களின் கலவையாக இந்த படத்தை கொடுத்துள்ளார். பல காட்சிகள் 'ஓகே ஒக்கே' படத்தை ஞாபகப்படுத்துகிறது. டாஸ்மாக் காட்சி இல்லாதது மட்டும் ஒரு ஆறுதல். சிவகார்த்திகேயனின் இமேஜை உயர்த்தும் வசனங்களை அவரை வைத்தே பேச வைத்துள்ளார். ஆனால் சுத்தமாக எடுபடவில்லை. சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்டுடியோக்ரீன் என ஒரு நல்ல டீம் அமைந்தும் அருமையான வாய்ப்பை மீண்டும் மிஸ் செய்துள்ளார் இயக்குனர் ராஜேஷ். 
 
மொத்ததில் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மிஸ்டர் மொக்கை என்றுதான் கூற வேண்டும்
 
1.5/5

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்