வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பாடகிகள் - சின்மயி அதிரடி விளக்கம்
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (18:29 IST)
தன்னை போல பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் என்னைப்போலவே தைரியமாக குற்றங்களை முன்வந்து சொல்லவேண்டும் என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்
கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக இன்று பாடகி சின்மயி தன் பேஷ் புக் லைவில் பேசும் போது , தன்னைப்போல பல பாடகிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து உண்மைதான். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்களிடம் கேட்டால் தாங்கள் சந்தித்த அல்லது பார்த்த பிரச்சினைகளை கூறுவர்.
பொதுவாக வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்பவர்கள் சிலரால் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். நடிகைகளிடம் கேட்டால் நிறைய வெளிவரும். பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள், கைதி போல நடத்துவார்கள். பாலியல் வன்முறை மட்டுமல்லாமல் இன்னும் பல கொடுமைகள் நடக்கும்.
சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாலியல் தொந்தரவு தொடர்பாக ஆண் குழந்தைகளுக்கு எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவதில்லை. பாலியல் தொந்தரவு குறித்து பெண் குழந்தைகள் கூறினால் அதை காது கொடுத்து கேட்க வேண்டும்.
சுவிட்சர்லாந்தில் நடந்த ‘‘வீழமாட்டேன்?’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதைகாகவே நான் அங்கு சென்றேன் அப்போது வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்குவதற்காக நான் சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது. மேலும் என்னிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை.அது இது அந்த நிகழ்ச்சி தொடர்பான அனைவருக்குமே தெரியும்.
ஆனால் , அப்போதே ஏன் நான் புகார் அளிக்கவில்லை என்று கேள்வி எழுகிறது. இப்போதே நான் சொல்வதை நம்பாத இந்த தமிழ் சமூகம் அப்போது சொல்லியிருந்தாலும் ஒப்புக் கொள்ளவா போகிறது?
இப்போது தான் பாலியல் தொல்லைகள் பற்றி அதிகமாக பேசத் தொடங்கியிருக்கிறோம். நிலைமை மாறிக்கொண்டே வருவதால் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். என்னை அரசியல் கட்சியுடன் இணைத்து பேசுகிறார்கள். நான் அரசியல் கட்சி சார்பற்றவள். ஆதார் கார்டு முதல் பணமதிப்பிழப்பு விவகாரம் வரை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன்.
தவறுகளை தட்டிக் கேட்டால் அந்த பெண்களின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஆதலால் பலர் தங்களுக்கு நேர்த்தவைகளை குறித்து பேச வெட்கப்படுகிறார்கள். ஆனால் வைரமுத்து மீதான குற்றச்சாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும். நான் ஏன் வெட்கப்பட வேண்டும். மீ டூ மூலம் ஏராளமான குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார். என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘மீ டூ’ மூலம் கற்பழிப்பு புகார்கள் கூட வெளியில் வருகின்றன.
பெண்கள் சமூகத்தில் உடன் பழகும் பல ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். அதை அவர்கள் வெளிப்படுத்த நாம் இடம் கொடுப்பதில்லை. ஏன் ஆண்களும் கூட சிறுவர்களாக இருந்தபோது தொல்லைக்கு ஆளாகி உள்ளனர். குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு, சிறுமிகளுக்கு அதிகமாக இதுபோன்ற தொல்லைகள் நடக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என பாடகி சின்மயி பேஸ்புக் லைவில் தெரிவித்துள்ளார்.