விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா ஜேசு கடந்த சில ஆண்டு காலமான நிலையில், இந்த குழுவில் இருந்த இன்னொரு நடிகர் இன்று காலமானதாக வெளியான செய்தி, திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜேசு என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காலமானார். இந்த நிலையில், இன்று இதே லொள்ளு சபாவில் இடம் பெற்ற சபா ஆண்டனி என்பவர் காலமாகியுள்ளார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, அதன் பிறகு சந்தானம் நடித்த பல திரைப்படங்களில் நடித்தவர் சபா ஆண்டனி. 'தம்பிக்கோட்டை' என்ற படத்தில் இவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதும், சந்தானத்தின் நண்பராக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட சபா ஆண்டனி, அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நேரத்தில் சந்தானம் உட்பட பல லொள்ளு சபா நடிகர்கள் அவரது சிகிச்சைக்காக பண உதவி செய்தனர்.
இந்த நிலையில், இன்று உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததை அடுத்து, அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, லொள்ளு சபா ஆண்டனியின் உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.