வெங்கட்பிரபுவை பாராட்டி 13 வருடங்களுக்கு முன் பாலசந்தர் எழுதிய கடிதம்!

திங்கள், 27 ஏப்ரல் 2020 (19:51 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாகிய ‘சென்னை 600028 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவரை பாராட்டி இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் 13 வருடங்களுக்கு பின் எழுதிய கடிதத்தை வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
 
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் ‘சென்னை 600028 ‘ குறித்து தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: அன்புள்ள வெங்கட் பிரபு அவர்களுக்கு, முதற்கண் எனது இதயபூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தங்களது ’சென்னை-28’ படத்திற்கு. லகான் தங்களுக்கு ஒரு ஆரம்பபுள்ளி வைத்திருக்கிறது என்றாலும் எத்தனை தமிழ் சினிமா பிரபலங்களுக்கு அந்தத் துணிச்சல் வந்தது நான் உள்பட
 
உங்களால் தான் அது முடிந்திருக்கிறது. அந்த வயது பிள்ளைகள் இப்படித்தான் அதிரடி அட்டகாசங்களை செய்வார்கள். தண்ணி அடிப்பார்கள். லவ் பண்ணுவார்கள். அந்த லவ் ராவ்வாகத்தான் இருக்கும்.  சினிமாத்தனமான எதுகை மோனையோடு டூயட் பாடிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்னும் இன்ன பிற விஷயங்களில் உங்களது நேர்மையான பார்வை என்னை மிக மிக கவர்ந்தது
 
சலிப்போ அலுப்போ இல்லாத ஒரு குறையுமின்றி கதை அமைப்பும் வசனங்களும் அந்த வயது விடலை போலவே துள்ளி திரியும் கேமராக் கோணங்களும் பார்த்தபோது தேர்ச்சி பெற்ற ஒரு செல்லுலாய்டு மாணவனின் தங்கப்பதக்கம் பெற்ற ஒரு திரைப்படம் போல் எனக்கு தோன்றியதில் வியப்பில்லை
 
யுவனின் இசை பெரிதாக கைகொடுத்திருக்கிறது. உங்களுடன் ஒத்துழைத்த சகோதர நண்பர்கள் அத்தனை பேருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். எஸ்பி சரணுக்கு இனி ஒரு மகுடம். மிகப் பெரிய எதிர்காலம் தங்களை நோக்கி காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை’ 
 
இவ்வாறு இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்