இல்லத்தரசிகள் குறித்து கவலைப்படும் ஜோதிகா

வியாழன், 21 மே 2015 (09:19 IST)
தான் நடிக்கும் படத்தின் கருத்து எதுவோ அதையொட்டி கருத்துகளை கூறுவது சினிமா நட்சத்திரங்களின் வாடிக்கை. அவர்களின் ஆவேச அறிவுரைகள் அடுத்தப் படத்திலேயே காணாமல் போகும்.
 
உதாரணமாக, அந்நியன் படத்தில் விக்ரம் நடிக்கையில், சின்னச் சின்ன தவறுகள்தான் சமூகத்தில் பெரிய சீரழிவாக உருவெடுக்கிறது. அதனை அந்நியனில் காட்டியிருக்கிறோம். சின்னச் சின்ன தவறுதானே என்று எதையும் பார்க்கக் கூடாது, அவற்றை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் தமிழக மக்களுக்கு வகுப்பு எடுத்தார்.
அந்நியனுக்கு பிறகு மஜா படத்தில் நடித்தார். அதில் அவருக்கு ஜாலி திருடன் வேடம். ஜாலியா சின்னச் சின்ன திருட்டு செய்யிற ஒருத்தனை பற்றிய கதையிது. அந்த மாதிரி ஜாலி திருடங்க இருக்கிறாங்க. அதில் ஒருத்தனை பற்றிய கதை என திருட்டை ஜாலியாக்கினார். அந்நியனில் அநியாயமாக தோன்றிய திருட்டு, அடுத்தப் படத்திலேயே சும்மா ஜாலியாக மாறியது.
 
36 வயதினிலே படத்தில் நடித்த ஜோதிகாவும் அந்தப் படத்தின் கருத்தையொட்டி அறிவுரைகளாக பொழிகிறார்.
 
"பெண்கள் முன்னேற்றத்தை விரும்பும் ரசிகர்களால் 36 வயதினிலே படத்துக்கு பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. அவர்களின் பேராதரவோடு இந்த படம் அமோக வெற்றி பெற்றுள்ளது. இது பெருமையளிப்பதாக உள்ளது. 
 
ரசிகர்கள் எல்லோரும் இந்த படத்தை ரசித்து இருக்கிறீர்கள். பெண்கள் வெற்றியை போற்றக்கூடியவராகவும் இருக்கிறீர்கள். எனவேதான் படத்துக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. சமுதாயத்தில் இனி நிறைய வசந்திகள் தங்கள் லட்சியங்களை வென்றெடுக்க தயாராவார்கள். 
 
இல்லத்தரசிகளாக பணிகள் செய்யும் பெண்கள் தங்கள் கனவுகளை தியாகம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களை மதிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதையே தான் இந்த படத்தில் பதிவு செய்து இருக்கிறேன்" என்று சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
அடுத்தப் படத்தில் மஜா விக்ரம் போல் மாற்றிப் பேசாமல் இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்