ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'!!

வியாழன், 21 டிசம்பர் 2023 (18:40 IST)
ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உலகளாவிய கவனம் பெறும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய‌ பான்-இந்தியா திரைப்படமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' இந்திய ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றுள்ள‌ நிலையில், உலகளாவிய கவனத்தை ஈர்க்க தற்போது தயாராகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், பெருமை வாய்ந்த ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFR) டச்சு பிரீமியர் பிரிவில் திரையிடப்படுவதற்காக‌ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' 2024 ஜனவரி மாதத்தில் ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் திரையிடப்படுவ‌து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை IFFR குழு வெளியிட்டுள்ளது.

உலகளவில் நன்கு அறியப்பட்ட மற்றும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான  ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் அமைப்பாளர்கள் அங்கு திரையிடப்படும் படங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் குறிப்பாக‌ இருந்து, நல்ல சினிமா மட்டுமே அங்கு திரையிடப்படுவதை உறுதி செய்கிறார்கள். 1972ம் ஆண்டில் தனது பயணத்தை தொடங்கிய இந்த விழா, வித்தியாசமான மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கு தளமளித்து திறமைகளை கொண்டாட தவறுவதில்லை.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறுகையில், "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம்  ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் டச்சுப் பிரீமியர் பிரிவில் திரையிடப்படுவதில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் உலகளவில் கவனத்தை கவர்ந்துள்ளது என்பதற்கு இதுவே ஒரு சான்று. IFFR லைம்லைட் பிரிவில்  எங்கள் படத்தின் டச்சு பிரீமியரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்," என்று கூறினார்.

இயக்குந‌ர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் அடிநாதமே 'நீங்கள் கலையை தேர்வு செய்யவில்லை. கலை உங்களை தேர்வு செய்கிறது' என்பது தான். ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டச்சு பிரீமியருக்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' லைம்லைட் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இந்தக் கருத்தை சிறப்பாக பிரதிபலிக்கிறது.

ஒரு நல்ல சினிமா என்பது மொழி மற்றும் நிலத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று.  எனவே, இந்தியப் பார்வையாளர்களைப் போலவே ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா பார்வையாளர்களும் இந்தப் படத்தை வரவேற்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்றார்
தீபாவளி விருந்தாக நவம்பர் 10 அன்று பல மொழிகளில் திரைக்கு வந்த  'ஜிகதண்டா டபுள் எக்ஸ்', அதிக வசூலை குவித்ததோடு விமர்சன ரீதியாகவும் பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்