ரஜினி பாணியை அப்படியே பின்பற்றிய இந்தி ஸ்டார் நடிகர்! - தடை விதித்த நீதிமன்றம்!

Raj Kumar

திங்கள், 20 மே 2024 (13:32 IST)
இசையமைப்பாளர்களுக்கு எப்படி அவர்களது இசை ஒரு அடையாளமாக இருக்கிறதோ அதே போல நடிகர்களுக்கு அவர்களது தோற்றம் மற்றும் குரல்தான் அடையாளமாக இருந்து வருகிறது. எனவே அந்த அடையாளத்தை அவர்களது அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை.



தமிழில் டப்பிங் ஆகி வரும் சில கார்ட்டூன் தொடர்களில் ரஜினிகாந்த் மாதிரியான முன்னணி நடிகர்களின் குரல்கள் அவர்கள் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தனது அனுமதி இல்லாமல் தன் குரல், உருவம், பெயர் போன்ற எதையும் பயன்படுத்தக்கூடாது என சட்ட ரீதியாகவே  எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நடிகர் ஜாக்கி ஷெராப் தமிழில் ஆரண்ய காண்டம், பிகில், ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் மிக பெரும் பிரபலமான இவர் நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் ஆவார். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் நடித்தும் இருந்தார். இந்த நிலையில் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் நடிகர் ரஜினிகாந்த் பாணியில் தனது அனுமதி இல்லாமல் தன் குரல், உருவம், பெயர் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ALSO READ: 'இந்தியன் 2' புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்

ஜாக்கி ஷெராப்பின் வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் நருலா ஜாக்கி ஷெராப்பின் தோற்றம், குரல், புகைப்படம், அவரது பெயர் உள்ளிட்ட விஷயங்களை அவரது ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என கூறி அவற்றை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.

வர்த்தக ரீதியாக அவரது குரலை பயன்படுத்தும் நிறுவனங்கள் ஒரு வாரத்திற்குள் அவற்றை நீக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்