கைதாவாரா நடிகர் சூர்யா?: தப்பிக்க வழி இருக்கிறதா?

புதன், 24 மே 2017 (13:09 IST)
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகததால் நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 முக்கியமான நடிகர்களுக்கு நீலகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.


 
 
கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஷ்வரி விபச்சார வழக்கில் கைதான பின்னர் அவர் வாக்குமூலம் அளித்ததாக மேலும் சில முக்கியமான நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பத்திரிகைகள் அந்த நடிகைகளின் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது. ஆனால் ஆதாரம் இல்லாமல் இந்த செய்தியை வெளியிட்டதாக சினிமா துறை கண்டனம் தெரிவித்தது.
 
அதனையொட்டி நடிகர் சங்கம் நடத்திய கண்டனக்கூட்டத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் பலர் பத்திரிகையாளர்களை மிகவும் தரக்குறைவாக பேசினர். இதனையடுத்து நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீது வழக்கு தொடர்ந்தார் ரிபோரியோ என்ற வழக்கறிஞர்.
 
ஆனால் அந்த வழக்குக்கு நடிகர்கள் உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடையைப் பெற்றனர். அந்த இடைக்கால தடை கடந்த மாதத்துடன் காலாவதியானது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் வரும் ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகாவிட்டால் அவர்களை கைது செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதனையடுத்து நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 முக்கிய நடிகர்கள் கைது செய்யப்படுவார்களா என்ற பரபரப்பு நிலவி வந்தது. இந்த கைது நடவடிக்கையில் இருந்து இவர்கள் தப்பிக்க வழியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த வழக்கானது மாவட்ட நீதிமன்றத்தில் தான் நடக்கிறது. எனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தேதிக்குள் நேரில் ஆஜராகி விசாரணையை தள்ளிவைக்க சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட நடிகர்கள் நேரில் ஆஜராக முடியவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் ஒரு தடையைப் பெற்றுவிட்டால் போதும், கைது செய்ய முடியாது. எனவே நடிகர்கள் கைதாவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்