சமீபத்தில் மகாராஷ்டிராவை பாதுகாப்பற்ற பகுதி என்றும், மினி பாகிஸ்தான் என்றும் நடிகை கங்கனா ரனாவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவ்வாறு பேசியதற்கு கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கங்கனாவிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசின் ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கங்கனாவின் மும்பை வீட்டில் மாநகராட்சி நோட்டிஸ் ஒட்டியுள்ளது. அதில் கங்கனா ரனாவத் தனது மாளிகையில் அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், கங்கனா ரனாவத் வீட்டில் கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியுள்ளதாகவும், மேலும் சில புதிய கழிவறைகளை கட்டியுள்ளதாகவும், வீட்டிலேயே அலுவலகமும் செயல்பட அனுமதி பெறவில்லையென்றும் கூறப்பட்டது.
தற்போது அத்துமீறி கட்டப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ள மும்பை மாநகராட்சி கங்கனா ரனாவத் வீட்டின் அத்துமீறி கட்டப்பட்டதாக பகுதிகளை ஆட்களை கொண்டு தகர்க்க தொடங்கியுள்ளனர். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கங்கனா ரனாவத் ”நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் எனது எதிரிகள் என் மும்பை பாகிஸ்தானாக மாறிவிட்டதை நிருப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஜனநாயகம் வீழ்ந்துவிட்டது” என பதிவிட்டிருந்தார்.