இளையராஜாவுக்கு சதாபிஷேக விழா!!

செவ்வாய், 31 மே 2022 (11:07 IST)
திருக்கடையூர் கோயில் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு சதாபிஷேக விழா நடைபெற்றது.
 
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
 
தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இந்தக் கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலமாதலால் இந்தத் தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
 
இந்தக் கோயிலில் 60, 70, 75, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முறையே மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களைச் செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது வழக்கம்.
 
இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு நேற்று மாலை 80 வயதை அடைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்தைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியம் இசைக்க கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
 
கோயில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை மற்றும் கஜ பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.
 
இன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் இரண்டாம் கால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்