தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த விழாவில் ரஜினி,கமல் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இளையராஜா 75 நிகழ்ச்சிக்குத் தடை விதிக்ககோரி சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மீது தீவிரக் குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் இளையராஜா 75 நிகழ்ச்சியை ஏன் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கூடாது என நீதிபதி வினா எழுப்பினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தயாரிப்பாளர் சங்க வழக்கறிஞர், நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும், தங்கள் மீது கூறப்படுவது தவறான குற்றச்சாட்டு என்றும் தெரிவித்தார்.
அப்படியானால் நிகழ்ச்சிக்கான ஒப்பந்த ஆவணங்களை மனுதாரர்களிடம் ஏன் வழங்கக் கூடாது என நீதிபதி வினா எழுப்பினார். இதையடுத்து இளையராஜா 75 நிகழ்ச்சிக்காகச் செலவிடப்பட்ட தொகை, ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை ஜனவரி 30ஆம் நாள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.