இந்நிலையில் நடிகர் அரவிந்த சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்தார். சதுரங்க வேட்டை-2 படத்தில் நடித்ததில் தனக்கு ரூ.1.79 கோடி சம்பள பாக்கி உள்ளது என்றும், அதனை வட்டியுடன் திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி மனோபாலாவுக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனோபாலா பதில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘‘சதுரங்க வேட்டை–2 படத்தின் சம்பள பாக்கி பிரச்சினையை அரவிந்தசாமியுடன் சமரசமாக பேசி தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். முதல் தவணையாக அரவிந்தசாமிக்கு அக்டோபர் 10–ந்தேதிக்குள் ரூ.25 லட்சத்தை கொடுத்த விட உறுதி அளிக்கிறேன். நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்காமல் சதுரங்க வேட்டை–2 படத்தை திரைக்கு கொண்டு வர மாட்டோம் என்று நீதிமன்றத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்’’ என குறிப்பிட்டிருந்தார்..
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரு தரப்பினரும் அக்டோபர் 12–ந்தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி உங்கள் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.