கடந்த சில ஆண்டுகளாகவே சிம்பு நடிக்க இருக்கும் படங்கள் குறித்து அறிவிப்பு மட்டுமே வெளி வந்து கொண்டிருக்கிறது என்பதும், படம் வெளிவரவில்லை என்பதால் சிம்பு ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் "பத்து தல". 2023 ஆம் ஆண்டு. இந்த படம் வெளிவந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவருடைய எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் தக்லைஃப் கூட அவர் ஹீரோவாக நடிக்கும் படம் கிடையாது என்பதும், அது கமலஹாசன் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், சிம்பு நடிக்க இருக்கும் மூன்று படங்களின் அறிவிப்பு அவருடைய பிறந்தநாளின் போது வந்தது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம், "பார்க்கிங்" இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம் என மூன்று அறிவிப்புகள் வந்தது.
அதுமட்டுமின்றி, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு படம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. மேலும், ஜாக்கிசான் உடன் ஒரு படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்த அறிவிப்புகள், தகவல்கள் எல்லாம் வெளிவந்து கொண்டிருந்தாலும், அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் தொடங்கவில்லை. எனவே அடுத்த படம் வெளியாக இன்னும் குறைந்தது ஒரு ஆண்டு ஆகும் என்றும், அப்படி பார்த்தால் "தக்லைப்" படத்தை தவிர்த்து விட்டு பார்த்தால், மூன்று ஆண்டுகளுக்கு படமே இல்லாமல் இருப்பதாகவும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.