விமல், ஓவியா நடித்து 2010ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் களவாணி. இயக்குனர் சற்குணம், ஓவியா ஆகியோருக்கு அறிமுக படமாகவும், வெற்றி படமாகவும் அமைந்தது களவாணி. படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது பாகமான “களவாணி 2” தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலன் “களவாணி-2 படத்தின் காப்புரிமையை தருவதாக நடிகர் விமல் என்னிடம் 1 கோடியே 50 லட்சம் வாங்கினார். அதற்கான ரசீதும் என்னிடம் இருக்கிறது. ஆனால் இப்போது எனக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை என கூறுகிறார்கள். என்னை ஏமாற்றுகிறார்கள்” என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் படம் ரிலீஸுக்கு தடைவிதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் விமலும், தயாரிப்பாளர் சிங்காரவேலனும் சந்தித்து பேசி சமரசம் செய்து கொண்டனர். இது குறித்து சிங்காரவேலன் “நான் கொடுத்த பணத்துக்கு ஈடாக 2019-ம் ஆண்டுக்குள் 2 படங்கள் நடித்து கொடுப்பதாக விமல் ஒப்புதல் கடிதம் அளித்துள்ளார். இதனால் நான் வழக்கை திரும்ப பெறுகிறேன்” என்று தெரிவித்தார். தற்போது இந்த சமரச பேச்சுவார்த்தையால் படம் மீதான தடை நீங்கி களவாணி-2 ரிலீஸுக்கு தயாராக உள்ளது