31 ஆண்டுகளுக்கு பின் இணையும் இயக்குநர் இமயம் பாரதிராஜா-இசைஞானி இளையராஜா!

செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (11:47 IST)
இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் 'மார்கழி திங்கள்' படத்திற்காக இளையராஜா இசையில் பாடல் பதிவு


 

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க உள்ளார்.

இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் 'நாடோடி தென்றல்' ஆகும்.

தற்போது 'மார்கழி திங்கள்' திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் உருவான பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாடல் அனைவரின் இதயங்களையும் தொடும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு மனோஜ் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். இயக்குநர் மணிரத்னத்திடம் 'பம்பாய்' படத்தில் உதவி இயக்குந‌ராக மனோஜ் பாரதிராஜா பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது, அதனையொட்டி அவரை சந்தித்து மனோஜ் ஆசி பெற்றார்.

அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்று மனோஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் புதிய திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்