கொரோனாவு ஊரடங்குக்குப் பின் வந்த மின்கட்டணம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தாங்கள் வழக்கமாக கட்டும் மின் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளது. இதற்குக் காரணம் ஊரடங்கால் மக்கள் அதிகமாக வீடுகளில் இருப்பதால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டாலும், அதிகமான மின் கட்டண சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதுபற்றி பலரும் சமூகவலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சேரன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டேக் செய்து ஒரு டிவீட்டைப் பதிவு செய்துள்ளார்.
அதில் ‘தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. ( கிராமங்களில் இருப்பவர்களுக்கும்) அதற்கான காரணம் சொல்லப்படவில்லை. இதுபோன்ற காலகட்டங்களில் மக்களுக்கு சலுகையோடு செயல்பட வேண்டிய நிர்வாகம் இப்படி அதிகப்படியாக வசூலிக்க நினைப்பது கேள்வியை எழுப்புகிறது. இதை எங்கே எப்படி கேட்பது என்று தெரியாத அப்பாவி மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அந்த துறை சார்ந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கவனிப்பார்களாக. வேலையின்றி வீட்டிற்கு உணவிற்கு தேவையான பணம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் சூழலில் இது போன்ற விஷயங்கள் ஏழைகளை மிரட்டுகிறது. வீட்டுக்கு வாடகையே கட்டமுடியாதவர்கள் எங்கிருந்து மின்சார கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்? இது போன்ற நேரங்களில் தளர்வு அளிக்கவேண்டும் அரசு’ எனத் தெரிவித்துள்ளார்.