தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் லியோ படம் குறித்து இவர் பேசியபோது த்ரிஷா குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக மன்சூர் அலிகான் மேல் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சமீபத்தில் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கையும் வெளியிட்டார் மன்சூர் அலிகான். அவர் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் த்ரிஷாவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் பிரச்சினை முடிந்ததா என்று பார்த்தால் மீண்டும் தொடங்கியுள்ளது.
தன்னை பற்றி அவதூறாக பேசிய த்ரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு போடப்போவதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். மூவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகள் வழக்கு தொடர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது எதிர்வரும் தேர்தலில் தான் ஒரு பெரிய கட்சியின் ஆதரவோடு நிற்க போவதாகவும், அதை தடுக்கும் நோக்கில் தன் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.