நெகட்டிவ் விமர்சனங்கள் வசூலைப் பாதித்ததா?... கூலி படத்தின் இரண்டாவது நாள் வசூல் விவரம்!

சனி, 16 ஆகஸ்ட் 2025 (07:53 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் (பில்டப் கொடுத்து உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பு?) படமாக இருந்த ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவான ‘கூலி’ படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் ரிலீஸானது. படம் வெளியான முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. புதிதாக எதுவும் இல்லாமல் மசாலா படங்களுக்கே உரிய அதே டெம்ப்ளேட் திரைக்கதை, கதாநாயக வழிபாடு என அரைத்த மாவையே லோகேஷ் அரைத்துள்ளார் என ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனாலும் இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 151 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படம் ஒன்றின் முதல் நாள் வசூலில் இதுவே அதிகம் என்றும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இந்திய அளவில் இந்த படம் முதல் நாளில் சுமார் 65 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக ஆன்லைன் டிராக்கிங் தளமான சாச்லின்க் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இரண்டாம் நாளில் ‘கூலி’ படம் 53 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதே தளம் தெரிவித்துள்ளது. இது முதல்நாள் வசூலை விட 10 கோடி ரூபாய்க்கு மேல் குறைவு. அடுத்தடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் இதே வசூல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்