வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்!

வியாழன், 26 ஜனவரி 2017 (12:23 IST)
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மதனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.


 
 
மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே மாதம் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார். இவரை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து வந்தனர்.
 
கடந்த நவம்பர் மாதம் திருப்பூர் வந்த மதனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில், மதன் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் உத்தரவாத தொகையாக ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
 
இந்த நிபந்தனை ஜாமீனை எதிர்த்து மதன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்