சமூகவலைதளங்களில் அவ்வபோது எதாவது ஒரு விஷயம் வைரலாகப் பரவி ட்ரண்ட் ஆகும். அதுபோல நேற்று திடீரென நேசமணிக்காக பிராத்தனை செய்யுங்கள் எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரண்ட் ஆனது. இது என்ன எனத் தெரியாமல் பலரும் குழப்பம் அடைந்தனர். அதன் பின்னர்தான் அந்த ஹேஷ்டேக்குக்குப் பின்னுள்ள நெட்டிசன்களின் குறும்பு தெரிந்தது.
டிவிட்டரில் ஒருவர் சுத்தியல் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு ‘இதற்கு உங்கள் நாட்டில் பெயர் என்ன?’ எனக் கேட்க அதற்குப் பதிலளித்த குறும்பர் ஒருவர் ‘இதுதான் சுத்தியல். இதைக் கொண்டு அடிக்கும் போது டிங்டாங் என சத்தம் கேட்கும். பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி(பிரண்ட்ஸ் பட வடிவேலு) இதனால் தாக்கப்பட்டார்’ எனக் குறிப்பிட்டார். உண்மை அறியாத மற்றொருவர் ‘ஓ.. இப்போது நேசமணி எப்படி இருக்கிறார்? ‘ எனக் கேட்டார்.
அவரின் வெகுளித்தனமானக் கேள்விக்குப் பதிலளித்த குறும்பர் ‘இப்போது நன்றாக இருக்கிறார். நாங்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து முதலுதவி செய்தோம்.’ எனக் கூற அந்த நபர் ‘நேசமணிக்காக பிராத்தனை செய்வோம்’ எனக் கூற, அதைப் பிடித்துக்கொண்ட நெட்டிசன்கள் அதையே ஹேஷ்டேக்காக்கி டிரண்ட் செய்துள்ளனர். இப்போது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் முழுவதும் நேசமணிக்கான பிராத்தனைகளாகக் குவிந்து வருகின்றனர். இன்னும் சிலரோ ஒருபடி மேலேப் போய் நேசமணி தாக்கப்பட்டது அயல்நாட்டு சதியாக இருக்குமோ என்ற அளவில் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளனர்.
இந்நிலையில் நேசமணியின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவருக்குப் பதிலாக புதிய காண்ட்ராக்டராக அவரிடம் அல்லக்கையாக பணிபுரிந்த கோவாலு பதவியேற்பதாக நெட்டிசன்கள் அறிவித்துள்ளனர். அதற்காக சார்லி பதவியேற்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஓபிஎஸ் பதவியேற்றதைக் கிண்டல் செய்யும் விதமாக அமைந்துள்ளது.