இரண்டுப் படங்களும் அந்தந்த படங்களின் ரசிகர்களையே இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொதுவான சினிமா ரசிகர்களுக்கு கலவையான உணர்வையும் அளித்துள்ளன. பேட்ட படம் ரஜினியின் இளமை துள்ளலான ரஜினிக்காவும், விஸ்வாசம் படம் குடும்ப செண்ட்டிமெண்ட்காகவும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கான விடுமுறைகள் முடிய இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் இருப்பதால் இரண்டுப் படங்களும் வசூலில் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் முதல்நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் விஸ்வாசம் படம் தமிழகம் முழுவதும் 15 கோடியும் பேட்ட படம் 11 கோடியும் கலெக்ட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வசூல் விவரங்களை சர்கார் படத்தின் வசூல் விவரத்தோடு ஒப்பிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. சர்கார் படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல்நாளில் 30 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பேட்ட படமும் விஸ்வாசம் படமும் சேர்ந்தே தமிழ்நாட்டில் மொத்தமாக 26 கோடி ரூபாய்தான் வசூல் செய்தூள்ளது.
இதனால் ரஜினி, அஜித்தை விட விஜய்தான் தற்போதைய தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் சர்கார் படத்தின் டிக்கெட்கள் கவுண்ட்டரிலேயே அநியாய விலைக்கு விற்கப்பட்டதாகவும் விஸ்வாசம், பேட்ட படத்தின் டிக்கெட்கள் சர்காரை ஒப்பிடும் போது ஓரளவு நியாயமான விலைக்கு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.