ஒரு வழியாக அயோத்தி படத்தின் கதை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி… எழுத்தாளர் மாதவராஜ் பதிவு!
சனி, 11 மார்ச் 2023 (08:33 IST)
சசிகுமார், புகழ் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அயோத்தி திரைப்படம். சமீபத்தில் இந்த படம் வெளியாகி பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் இந்த படம் இப்போது பார்வையாளர்களைக் கவர தொடங்கியுள்ளது. இந்த வாரம் வெளியான படங்களில் மற்ற படங்கள் பெரிதாகக் கவராத நிலையில் சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஹிட் படமாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் கதை எழுத்தாளர் மாதவராஜ், சில ஆண்டுகளுக்கு முன்னர் உண்மை சம்பவத்தைப் பற்றி எழுதிய பதிவை திருடி உருவாக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் அதை எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தரப்பு மறுத்தது. ஆனால் பெரும்பாலோனோர் மாதவராஜ் பக்கமே உண்மை இருப்பதாக கருத்து தெரிவித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் எழுத்தாளர் மாதவராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அது பற்றி மாதவராஜின் பதிவில் “நேற்று அயோத்தி படத்தின் இயக்குனர் தரப்பிலிருந்து என்னுடன் நேரில் பேச விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. இன்று சென்னையில், சாஸ்திரி பவனில் , டெபுடி லேபர் கமிஷனர் முன்பு எனது கிராஜுவிட்டி வழக்கு குறித்த ஹியரிங் இருப்பதால், நான் சென்னைக்கு வர இருப்பதாக தெரிவித்தேன். இன்று காலை என்னை படக்குழுவின் சார்பில் தொடர்பு கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குனர் மந்திரமூர்த்தி, துணை இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோருடன் சந்திப்பு நடந்தது. என்னுடன் வழக்கு சம்பந்தமாக வந்திருந்த - எங்கள் வங்கியில் பணிபுரிந்த - தொழிற்சங்கப் பொறுப்புகளில் இருந்த - தோழர் விஸ்வநாதன் Viswanathan PV இருந்தார்.
நடந்த விஷயங்களை இரு தரப்பிலும் பகிர்ந்து கொண்டோம். தயாரிப்பாளர் மிகுந்த புரிதலோடு பேசியது சந்திப்பை அர்த்தமுள்ளதாகவும், இணக்கமானதாகவும் ஆக்கியது. இந்தப் படம் முக்கியமான, அவசியமான படம் என்று எனது பாராட்டுக்களைத் தெரிவித்தேன். இந்தப் படத்திற்காக கடும் உழைப்பை செலுத்தியதை, களப்பணி ஆற்றியதை இயக்குனர் மந்திரமூர்த்தி விவரித்தார். இயக்குனர் மந்திரமூர்த்தியிடம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கொடுத்த கதை, நான் 2011ல் தீராத பக்கங்களிலும், Bank Workers Unity பத்திரிக்கையிலும் எழுதிய பதிவிலிருந்து எடுத்து எழுதப்பட்ட கதை என்பது தெரிய வந்தது.
அயோத்தி படம் OTT தளத்தில் வெளியாகும்போது, நிஜத்தில் பாதிக்கப்பட்ட வட இந்தியக் குடும்பத்திற்கு உதவிய பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், அதன் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமார், சுரேஷ் பாபு ஆகிய இருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அதற்கான ஏற்பாடுகளை செய்து அவர்களுக்கான அங்கீகாரத்தை அளிப்பதாக நம்பிக்கையளிக்கப்பட்டது. தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும், இயக்குனர் மந்திரமூர்த்திக்கும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன். இந்த பிரச்சினையில் ஆதரவளித்த, துணை நின்ற அத்தனை பேருக்கும் நன்றி.” எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில் இந்த படத்துக்காக திரைக்கதை உருவாக்கிய எழுத்தாளர் சங்கர்தாஸின் பெயர் இடம்பெறாதது சம்மந்தமான சர்ச்சை இன்னும் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.