நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக பிரேமம் என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு 5 ஆண்டுகளாக அவர் அடுத்த படத்தை பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பஹத் பாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாக இப்போது பிருத்விராஜ் நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர் தளபதி விஜய்யுடன் சேர்ந்து ஒரு காதல் படம் பண்ணுங்கள். எனக் கோரிக்கை வைத்தார். அதற்குப் பதிலளித்த அல்போன்ஸ் பிரேமம் படம் ரிலிஸ் ஆனதும் எனக்கு முதன் முதலில் தமிழ் சினிமாவில் இருந்து வந்த அழைப்பு விஜய்யிடம் இருந்துதான். அவரை தனிப்பட்ட முறையில் ஒருமுறை சந்தித்து இருக்கிறேன். சீக்கிரமே அவரிடம் இருந்து அழைப்பு வரும் என எதிர்பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.