சர்ச்சையை கிளப்பும் விஜய் போஸ்டர்:காவி வேஷ்டியின் பின்னணி என்ன?
சனி, 22 ஜூன் 2019 (11:21 IST)
விஜய் நடித்து வெளிவரவிருக்கும் ”பிகில்” படத்தின் போஸ்டர்கள் நேற்று வெளிவந்ததில் அந்த போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
”பிகில்” திரைப்படத்தில் நடிகர் விஜய், அப்பா-மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். இந்நிலையில் நேற்று “பிகில்” திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.
அந்த போஸ்டரில் விஜயின் இரு வேடங்களும் இடம்பெற்றிருந்தன. நேற்று இரவு வெளியான செகண்ட் லுக் போஸ்டரில், ”அப்பா” விஜய் காவி வேட்டியும் கழுத்தில் சிலுவையையும் அணிந்திருந்தது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த ’கெட்-அப்’ சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மக்களின் அடையாளமான காவி வேஷ்டியை உடுத்திவிட்டு கழுத்தில் சிலுவை அணிந்திருப்பது ஹிந்து மதத்தை இழிவு படுத்துவது போல் உள்ளது என பலர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற மத்திய அரசை விமர்சித்த காட்சிகளால், அப்போது விஜயின் மீது பல காட்டமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
“விஜயின் உண்மையான பெயர் ஜோசஃப் விஜய் என்றும், அவர் கிருஸ்துவர் என்பதால் தான் பா.ஜ.க. ஆட்சியை விமர்சிக்கிறார் என்றும் பலர் குற்றம் சாட்டினர்.
அதனை தொடர்ந்து தற்போதும் நடிகர் விஜய், மீண்டும் ‘பிகில்’ திரைப்படத்தின் மூலம் ஹிந்து மதத்தை இழிவுபடுத்துகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் விஜயை குற்றம் சாட்டிவருகின்றனர்.
விஜய் நடித்த ”துப்பாக்கி” திரைப்படத்திலிருந்து எப்போது விஜய் திரைப்படம் வெளிவந்தாலும், இது போன்ற மத குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சில குறிப்பிட்ட வகுப்பினரால் வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.