மனோபாலா மறைவு கழகத்துக்கு பேரிழப்பு… எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

புதன், 3 மே 2023 (15:48 IST)
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல் பேச்சாளர் என பன்முகத்திறமை கொண்ட மனோபாலா இன்று காலமான நிலையில் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. திரைத்துறை தவிர, அவர் அதிமுகவில் இணைந்து பேச்சாளராகவும் செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில் அதிமுக சார்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளரும், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

மனோபாலா `ஆகாய கங்கை’ என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கியதோடு, தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும், பல்வேறு திரைப்படங்களில் நடித்து, மக்கள் அனைவரையும் தனது நகைச்சுவை நடிப்பால் சந்தோஷப்படுத்தியவரும், பழகுவதற்கு இனிமையானவருமான நடிகர் மனோபாலா, அதிமுகவின் மீதும், தொடர்ந்து கட்சித் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு, தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளராக கட்சியின் கொள்கைகளை நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவையோடு பல்வேறு பொதுக்கூட்டங்கள் வாயிலாக எடுத்துரைத்து, சிறந்த முறையில் கட்சிப் பணிகளை ஆற்றியவர்.

தேர்தல் காலங்களில் இவருடைய பிரச்சாரப் பணிகள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை. அன்னாரது இழப்பு கழகத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகுந்த பேரிழப்பாகும். அன்புச் சகோதரர் நடிகர் மனோபாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்