விஷாலின் உறவுக்கார பெண்ணாக முக்கிய வேடத்தில் நடிக்க அபிநயாவை ஒப்பந்தம் செய்துள்ளார் ஹரி. நாடோடிகள், ஈசன் உள்பட சில படங்களில் நடித்த அபிநயா மலையாளத்தில் ஒன்றிரண்டு படங்களில் நடித்தார். தமிழில் அவர் அதிக சம்பளம் கேட்டதால் பல வாய்ப்புகள் தட்டிப் போயின. சின்ன இடைவெளிக்குப் பிறகு அவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புதான் பூஜை.
இந்தப் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெடி படத்தின் போது விஷால், ராதிகா இடையே மோதல் வெடித்தது. அது இன்னும் புகைந்து கொண்டிருக்கும் நிலையில் பூஜையில் ராதிகா நடிப்பதை விஷால் அவ்வளவாக விரும்பவில்லையாம். ஹரியின் நிர்ப்பந்தத்தால் கடைசியில் ராதிகா நடிக்க சம்மதித்திருக்கிறார். பூஜையுடன் விஷால் - ராதிகா லடாய்க்கு பூசணிக்காய் உடைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.