பாகிஸ்தானில் இந்தியப் படங்களுக்கு தடை

ஞாயிறு, 22 டிசம்பர் 2013 (14:53 IST)
தூம் 3 பாகிஸ்தானிலும் வெளியாவதாக அறிவித்து முன் பதிவும் நடந்தது. இந்நிலையில் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை இந்திய படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கூடாது என லாகூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
FILE

இந்தியா - பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தியாவில் தயாரான சினிமா, நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி உள்பட எதையும் பாகிஸ்தானில் ஒளிபரப்பக் கூடாது என அந்நாட்டு அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. ஆனால் சமீப வருடங்களில் இந்த சட்டத்தை மீறி இந்திய சினிமாக்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பாகிஸ்தானில் ஒளிபரப்பப்பட்டன. இந்திய சினிமாக்கள் குறிப்பாக ஹிந்தி சினிமாக்கள் நேரடி பாகிஸ்தான் படங்களைவிட பெரிய வெற்றியை பெற்றன.

இது நேரடி பாகிஸ்தானிய படங்களை தயாரித்தவர்களையும், விநியோகித்தவர்களையும், தொலைக்காட்சி தயாரிப்பாளர்களையும் பாதித்தது. அவர்கள் 1979 ஆம் ஆண்டு தடைசட்டத்தை மேற்கோள் காட்டி இந்திய சினிமா, தொலைக்காட்சி தொடர்களை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றம் சென்றனர். எதிர்தரப்பில், பாகிஸ்தான் சென்சார் போர்ட்தான் சான்றிதழ் வழங்கியது. இந்திய படங்களை திரையிடுவதா வேண்டாமா என்பதை சென்சார்தான் தீர்மானிக்கிறது என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை இந்திய படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றை பாகிஸ்தானில் திரையிடவும், ஒளிபரப்பவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த திடீர் உத்தரவு காரணமாக தூம் 3 உள்பட ஹிந்திப் படங்களுக்கு பாகிஸ்தானில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்