தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்ட ஜெய், நஸ்ரியா படம்

வியாழன், 29 மே 2014 (12:02 IST)
ஜெய், நஸ்ரியா நசீம் நடித்த திருமணம் எனும் நிக்காஹ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 
மலையாளத்தில் அறிமுகமான நஸ்ரியா நடித்த முதல் தமிழ்ப் படம் திருமணம் எனும் நிக்காஹ். ஜெய் ஹீரோவாக நடிக்க ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பு. ஜிப்ரான் இசையில் படத்தை அனீஸ் என்ற புதுமுகம் இயக்கியிருந்தார். 
ஆஸ்கர் ஃபிலிம்ஸின் வல்லினம், ஐ போன்ற படங்களால் திருமணம் எனும் நிக்காஹ் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. ஒருவழியாக படம் முடிந்து சென்சார் ஆன பிறகும் படத்தை வெளியிடுவதில் சிக்கல். பல ரிலீஸ் தேதிகளுக்குப் பிறகு மே 15 படத்தை வெளியிடுவதாக அறிவித்தனர். மே 16 வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாவதால் ஒருநாள் முன்னதாக மே 15 வியாழக்கிழமையே படத்தை வெளியிடுவதாக விளக்கமும் அளிக்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகவில்லை.
 
பிறகு மே 23 என்றனர். கோச்சடையான் வெளியானதால் அந்த தேதியிலும் படத்தை வெளியிடவில்லை. அடுத்து மே 30 வெள்ளிக்கிழமை கண்டிப்பாக வெளியாகும் என்றனர். ஆனால் மே 30 - நாளையும் படம் வெளியாகப் போவதில்லை என அறிவித்துள்ளனர். மறு தேதி குறிப்பிடாமல் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 
நஸ்ரியா தமிழில் நடித்த முதல் படம் இது என்றோம். அதன் பிறகு அவர் நடித்த நேரம், நய்யாண்டி, ராஜா ராணி, வாயை மூடி பேசவும் படங்கள் வெளியாகி திரையரங்கைவிட்டு சென்றும் விட்டன. 
 
நஸ்ரியா - பஹத் ஃபாசில் நிக்காஹ் முடிந்த பிறகாவது இந்த நிக்காஹ் வெளியாகுமா?
 

வெப்துனியாவைப் படிக்கவும்