டாய்லெட்டுக்கே சொல்லிட்டுதான் போகணும் - ஜீவா

புதன், 3 ஏப்ரல் 2013 (19:46 IST)
FILE
யான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜீவா, இரண்டு விஷயங்களை குறிப்பிட்டார். அதில் ஒன்று படப்பிடிப்புக்கு காலை ஏழு மணிக்கே நடிகர்கள் ஆஜராகிவிட வேண்டும். இரண்டாவது வெட்டி அரட்டை படப்பிடிப்பில் கூடாது, டாய்லெட் செல்வதாக இருந்தாலும் சொல்லிவிட்டே போக வேண்டும்.

தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் அந்நியமான விஷயங்கள் இவை. ஹீரோவுக்கோ, ஹீரோயினுக்கோ மூட் ஆஃப் ஆனால் கேரவனுக்குள் சென்று கதவை மூடிக் கொள்வார்கள். அந்த சொர்க்க வாசல் திறக்கும்வரை யூனிட்டில் உள்ள எழுபது பேரும் தேவுடு காக்க வேண்டும். இந்த கண்றாவி எல்லாம் ரவி கே.சந்திரன் தனது யான் படப்பிடிப்பிலிருந்து துடைத்து எறிந்திருக்கிறார்.

பர்ஸ்ட் எடிட் சிஸ்டம் என்கிற விஷயம் சினிமாவில் இருக்கிறது. ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பு, படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் என்னென்ன கருவிகள் வேண்டும், லைட்களின் எண்ணிக்கை எத்தனை, நடிகர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை எந்த கார் எத்தனை மணிக்கு எந்த இடத்தில் பிக்கப் செய்யும் என்பது முதற்கொண்டு சின்ன விஷயங்களும் தீர்மானிக்கப்படும். அந்த தீர்மானத்தை நுக்லிழை பிசகாமல் செயல்படுத்த வேண்டியது அனைவரின் கடமை. அது லைட்பாய் என்றாலும் படத்தின் ஹீரோ என்றாலும்.

இந்த திட்டமிடல் காரணமாக தேவையில்லாத பிரச்சனைகள், குழப்பங்கள் தவிர்க்கப்படுவதுடன் 90 நாள் படத்தை ஐம்பதே தினங்களில் முடித்துவிடலாம். இந்தியில் தயாராகும் அனேக சினிமாக்கள் இந்த அடிப்படையிலேயே தயாராகின்றன. இந்தி சினிமாவில் புழங்கியவர் என்பதால் அதனை தமிழ் சினிமாவில் நடைமுறைப்படுத்தியிருக்கிறார் ரவி கே.சந்திரன்.

இந்த நடைமுறை ரொம்ப நல்லா இருக்கு. பாதி பட்ஜெட்டில் படத்தை முடிச்சிடலாம் என்று உற்சாகமாக சொல்கிறார் யான் படத்தை தயாரிக்கும் எல்ரெட் குமார்.

ஹாலிவுட்டின் ஒவ்வொரு படமும் இப்படியான திட்டமிடல்களுடன்தான் தயாராகிறது. அதனால்தான் இரண்டு வருடங்கள் கழித்து வெளியாக உள்ள படத்தின் ரிலீஸ் தேதியையும் முன்கூட்டியே அவர்களால் சொல்ல முடிகிறது.

தமிழ் சினிமாவும் இதனை கடைபிடித்தால் தப்பிக்க வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்