சிவாஜி 3டி - ரஜினி ரசிகர்களுக்கு ஏவிஎம் மின் பரிசு

வியாழன், 22 நவம்பர் 2012 (11:23 IST)
PR
தனது இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பதாக தெரிவித்த ரஜினி இன்னும் அதற்கான இடத்தையும், தேதியையும் தேடிக் கொண்டிருக்கிறார். உடல்நிலை மோசமாகி சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு சென்ற போது ரசிகர்கள் திரளாக பிரார்த்தனை செய்தார்கள், மண் சோறு சாப்பிட்டார்கள், மொட்டை அடித்து காவடி ூக்கினார்கள் இன்னும் என்னென்னவோ செய்தார்கள். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று மேடைதோறும் ஆதங்கப்பட்ட ரஜினி இன்னும் என்ன செய்வது என்ற சிந்தனையிலேயே இருக்கிறார். இருக்கட்டும். லேட்டான முடிவாக இருந்தாலும் லேட்டஸ்டான முடிவாக இருக்கும் என நம்புவோம்.

இப்படியொரு சூழலில்தான் சிவாஜி படத்தை 3டி யில் உருவாக்கி வருவதாக ஏவிஎம் அறிவித்து பாடல் காட்சியை 3டி யில் திரையிட்டு காட்டியது. இந்த நிகழ்ச்சியில் ரஜினியும் கலந்து கொண்டார்.

ஏவிஎம் இந்த 3டி வேலையை இரண்டு வருடங்களாக செய்து வருகிறது. இந்த சேதி அறுபது சதவீத பணிகள் முடிந்த பிறகே ரஜினிக்கு தெரியுமாம். 3டி க்கான ஐடியா, உழைப்பு, பணம் எல்லாமே ஏவிம்முடையது. அப்படியிருக்க, ரசிகர்களுக்கு என்ன செய்ய போகிறேன் என்று கலங்கிக் கொண்டிருந்த ரஜினி தடாலடியாக ஒரு போடு போட்டார். சிவாஜி 3டி தான் ரசிகர்களுக்கான சிறந்த கைமாறு. கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு... அதே கதைதான்.

இப்படி ஏவிஎம் மின் உழைப்பில், ஐடியாவில் தயாராகியிருக்கும் 3டி படத்தில் சில மாறுதல்கள் செய்திருக்கிறார்கள். சரியாகச் சொன்னால் மோசமான சில காட்சிகளையும், இழுவையான சிலவற்றையும் ட்ரிம் செய்திருக்கிறார்கள். முக்கியமாக ஷங்கரின் அபத்தமான அங்கவை சங்கவை காட்சிகள்.

இந்த 3டி படத்தை ரஜினியின் பிறந்தநாளான 12-12-12 அன்று ஏவிஎம் திரையிடுகிறது. கோச்சடையான் விருந்தை எதிர்பார்த்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இந்த மருந்தாவது கிடைத்ததே.

தனது பிறந்தநாளில் ரசிகர்களால் சென்னை ஸ்தம்பித்துவிடும் என்று ரஜினி வெளிநாடு, வெளியூரில் தலைமறைவாவது வழக்கம். இந்தமுறை எப்படியோ. எப்படியிருந்தாலும் ரசிகர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் பரிசு இந்த சிவாஜி 3டி என்று அவர் அறிக்கை ஏதும் வெளியிடக் கூடாதே என்பதுதான் நமது பிரார்த்தனை.

வெப்துனியாவைப் படிக்கவும்