குசேலன் விழா - பாரதிராஜாவை கண்கலங்க வைத்த பாலசந்தர்!

செவ்வாய், 1 ஜூலை 2008 (19:57 IST)
பாலசந்தர் எனது மானசீக குரு என்று சொல்லும்போதே உணர்ச்சியில் பாரதிராஜாவின் குரல் உடைபடும். அப்படிப்பட்ட பாலசந்தர், பாரதிராஜாவை தனது ஒரே நண்பர் என்று சொன்னால்...?

உண்மையில் மிகவும் வித்தியாசமாக நடந்தது குசேலன் இசை வெளியீட்டு விழா. ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களை வெளியிட, பாலசந்தர், கெஜபதி பாபு, ரஜினி, ஜி.வி. பிரகாஷ், பி. வாசு மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் நண்பர்களை மேடைக்கு அழைத்து பாடல் சி.டி.யை அவர்களிடம் அளித்தனர்.

பாலசந்தர் நண்பர் என்ற முறையில் சி.டி.யை அளித்தது பாரதிராஜாவிடம். பார்ட்டி, கிளப் என்று போகும் பழக்கம் இல்லாததால் நண்பர்கள் தனக்கு அதிகம் இல்லையென்றும், இருக்கிற ஒரே நண்பர் பாரதிராஜாதான் என்றும் தெரிவித்தார் பாலசந்தர்.

இந்த ஒரு சொல் போதாதா?

தமிழ் சினிமாவின் பீஷ்மர் என்னை தனது நண்பன் என்று சொன்னது பத்மஸ்ரீ விருதைவிட மிகப்பெரியது. இதற்கு நன்றிக்கடன் பட்டவன் என்று நா. தழுதழுத்தார் பாரதிராஜா.

சந்திரமுகியின் போது ரஜினி, நான் யானை அல்ல குதிரை என்றார். குசேலனை பொறுத்தவரை அவர் குதிரை அல்ல புள்ளிமான். அந்தளவுக்கு குசேலனில் துள்ளி விளையாடியிருக்கிறார் என்றார்.

நிறைவாக நடந்த விழாவில் குறையாக கண்ணில் பட்டவை இரண்டு.

படத்தின் ரியல் நாயகன் பசுபதி விழாவில் மிஸ்ஸிங்.

இரண்டு, ரஜினியின் நண்பர் என்றாலே நினைவுக்கு வருகிறவர், ரஜினியுடன் பணிபுரிந்த டிரைவர் ராஜா பகதூர். பல படங்களில் ரஜினியுடன் இவர் நடித்துள்ளார். குசேலன் விழாவில் ரஜினியிடமிருந்து இவரே சி.டி.யை பெற்றுக்கொள்வார் என பலரும் நினைத்தார்கள். ஆனால் மேடையேறியது ரஜினியின் இன்னொரு நண்பரும் அவரது திருமண மண்டபத்தின் நிர்வாகியுமான முரளி!

வெப்துனியாவைப் படிக்கவும்