இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

Raj Kumar

வெள்ளி, 24 மே 2024 (13:16 IST)
எம்.ஜி.ஆர் பல நிறுவனங்களோடு சேர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். ஆனால் ஏ.வி.எம் நிறுவனத்தோடு சேர்ந்து அவர் நடித்த ஒரே திரைப்படம் அன்பே வா திரைப்படம் மட்டும்தான். அந்த படமும் இப்போது வரை ரசிக்கும் வகையில் சிறப்பான கதை அம்சத்தை கொண்ட திரைப்படமாகும்.



வழக்கமான எம்.ஜி.ஆர் படங்களில் இருந்து சற்று மாறி காமெடியான ஒரு படமாக அன்பே வா திரைப்படம் இருக்கும். இந்த திரைப்படத்தை இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இயக்கினார். இதில் சரோஜா தேவி கதாநாயகியாக நடித்தார்.

சரோஜா தேவியை பொறுத்தவரை அவர் நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வரவே மாட்டார். இந்த நிலையில் அன்பே வா படத்தின் வெளிப்புற படப்பிடிப்புகள் ஊட்டியில் நடந்தது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் சென்னைக்கு சென்று வர வேண்டியிருந்தது.

எனவே எம்.ஜி.ஆர் வருவதற்குள் சரோஜாதேவிக்கான காட்சிகளை எடுத்துவிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்தனர். அதனை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் “என்ன சீன் எடுக்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார். ’காலை ஐந்து மணிக்கு சூரியோதயம் தோன்றும்போது அந்த பனியோடு சரோஜாதேவியை வைத்து ஒரு காட்சி எடுக்க இருக்கிறோம்’ என கூறியுள்ளனர் படக்குழுவினர்.



அதை கேட்ட எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே “ஊட்டியில் அதுவும் காலையில் ஐந்து மணிக்கு சரோஜா தேவியை வைத்து காட்சி எடுக்க போறீங்களா.. அவ்வளவு சீக்கிரம் அவர் வந்துடுவார்னு எப்படி நினைக்கிறீங்க” என கூறிவிட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

அதன் பிறகு சரோஜாதேவியிடம் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை கூறினார் எஸ்.பி முத்துராமன். இதனால் ஐந்து மணிக்கு முன்பே படப்பிடிப்புக்கு வந்து சேர்ந்தார் சரோஜா தேவி. படப்பிடிப்பும் முடிந்தது.

திரும்ப சென்னையில் இருந்து வந்த எம்.ஜி.ஆர் ”என்ன சரோஜா தேவியை வைத்து எடுக்க வேண்டிய காட்சியை எடுத்தாச்சா?” எனக் குசும்பாக கேட்டுள்ளார். ஓ எடுத்தாச்சே என கூறியுள்ளனர் படக்குழுவினர். உண்மையை அறிந்த எம்.ஜி.ஆர் இந்த ஏ.வி.எம் யூனிட்காரங்க பொல்லாதவங்கப்பா என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்