இன்று வெளியாவதாக இருந்த வானவராயன் வல்லவராயன் படத்துக்கு கோர்ட் தடை

வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (12:01 IST)
இன்று வெளியாவதாக இருந்த படம் கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன். அதனை வெளியிட சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 
வழக்கம் போல இதுவும் பணப்பிரச்சனைதான். சென்னை அசோக் நகரில் உள்ள பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சோபனா டைமண்ட் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த தடையை நீதிமன்றம் விதித்துள்ளது.
 
வானவராயன் வல்லவராயன் படத்தை தயாரித்த மகாலட்சுமி மூவிஸின் கே.எஸ்.மதுபாலா படத்தின் உரிமையை தருவதாகக் கூறி ஒரு கோடியே பத்து லட்சம் சோபனாவிடம் வாங்கியிருக்கிறார். சோபனாதான் செலவு செய்து பாடல்கள் வெளியீட்டு விழாவையும் நடத்தியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் மதுபாலா படத்தின் உரிமையை வேறு சிலருக்கும் தந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
 
அதனைத் தொடர்ந்து 25 லட்சங்கள் மதுபாலா சோபனாவுக்கு திருப்பித் தந்துள்ளார். மீதி 85 லட்சங்கள் தர வேண்டும். அதனை செட்டில் செய்யாமல் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்பது சோபனாவின் வாதம். மதுபாலா ஏற்படுத்திய நெருக்கடி காரணமாக என்னுடைய கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என சோபனா தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதேநேரம் மனுதாரருக்கு தர வேண்டிய பணத்தை எதிர்மனுதாரர் தந்தால் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் எனவும் தனது தீர்ப்பில் கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்