ஒரு அகலமான பாத்திரத்தில் மைதாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். வெண்ணெய், தயிர் சேர்த்து நன்கு கையால் பிசையவும். தேவைப்படும் அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நன்கு அடித்துப் பிசையவும்.
பிசைந்த மாவை அப்படியே பத்து நிமிடங்களுக்கு வைத்துவிட்டு, அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும். சர்க்கரை கரைந்து கையில் ஒட்டும்பதம் வரும்போது (பாகுப் பதம் வந்துவிடக் கூடாது.) அடுப்பை அணைத்து, ஏலப்பொடி, எலுமிச்சைச் சாறு, விரும்பினால் நிறப்பொடி கலந்து ஆறவிடவும்.
பிசைந்துவைத்துள்ள மாவில் பாதியை எடுத்து உருண்டைகளாக உருட்டி நடுவில் அழுத்தி விடவும். இப்படியே மொத்த மாவையும் தயாரித்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு சிறு உருண்டையைப் போடவும். உருண்டை கொதித்து, பொரிப்பொரியாக மேலே வந்தால் அதுவே எண்ணெய்ச் சூட்டின் சரியான பதம். ஒவ்வொரு பாதுஷாவாக- சுமார் ஏழு அல்லது எட்டு- மெதுவாக எண்ணெய்யில் போடவும். போட்டவுடனே அடியில் போய், பின் ஒவ்வொன்றாக மேலே வர ஆரம்பிக்கும். எல்லா பாதுஷாவும் இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவிட்டு எடுக்கவும்.
சில நொடிகள் வடிதட்டில் வைத்து எண்ணெய்யை வடித்துவிட்டு சூட்டுடனே, ஆறிய பாகில் மெதுவாகப் போடவும். பதினைந்து இருபது நிமிடங்கள் நன்கு ஊறி, பாதுஷா மிருதுவானவுடன் வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும். சுவை மிகுந்த மிருதுவான பாதுஷா தயார்.