திராவிட இயக்க நாடகங்கள்- வெளி ரங்கராஜன்

1967-ல் தி.மு.க. பதவிக்கு வந்ததும் "கூத்தாடிகள் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள்" என்று பக்தவத்சலம் கூறினார். சமூகக் களத்தையே ஒரு நாடக மேடையாக்கி சாதாரண மனிதர்களையே பார்வையாளராகவும் பங்கு பெறுபவர்களாகவும் மாற்றிய பெருமை திராவிட இயக்கங்களுக்கே உரியது. தமிழகக் கலை இலக்கிய வரலாற்றில் ஒரு சாதாரண மனிதன் தனக்குரிய கலாச்சார இருப்பையும், ஈடுபாட்டையும் உணரத் தலைப்பட்டது திராவிட இயக்கங்களின் காலத்தில்தான். கதாகாலட்சேபங்களும் பக்திப் பாடல்களும், புராண இதிகாச நாடகங்களும் தமிழ் நாட்டுக் கலாச்சார சூழ்நிலையை ஆக்ரமித்துக் கொண்டிருந்த நேரத்தில் மேடைப்பேச்சு, பத்திரிகை ஈடுபாடு, சமூக விமர்சனம், இயக்கப் பாடல்கள் என்று கலாச்சாரத்தின் போக்கை மாற்றி புதிய ஈடுபாடுகளை உருவாக்கியது திராவிடர் இயக்கம். ஒவ்வொரு மேடையும், ஒரு நாடக மேடையைப் போலவே உணர்ச்சியையும், ஈடுபாட்டையும் எழுப்புவதாக இருந்தது. உவமைகள், உருவகங்கள், கதைகள் என மேடைப்பேச்சுக்குப் புதிய பரிமாணங்கள் கிடைத்தன. தமிழில் நாடகத்தன்மையுடன் கூடிய நீண்ட மேடைப்பேச்சு என்பது திராவிட இயக்க மேடைகளில்தான் கிடைத்தது. புதிய புதிய பேச்சுப் பாணிகள், புதிய சொல்லாக்கங்கள், மிக மிக நீண்ட வாக்கியங்கள் என்று தமிழ்ப் பேச்சு மொழிக்கு திராவிட மேடைகளில் புதிய வடிவம் கிடைத்தது. படித்தவர்கள் பேசத் திணறிய கருத்துக்களையெல்லாம் சாதாரணப் பேச்சாளர்கள் சரளமாகப் பேசினார்கள். இப்படி ஒரு நாடக நடிகனைப் போன்று மொழியின் மீது லாவகமும் ஆளுமையும் கொண்டிருந்தன திராவிடர் இயக்க மேடைகள். மிகவும் பிற்காலம் வரை நாடகங்களிலும் சினிமாக்களிம் நிலவிய பிராம்மணிய உரையாடல் மொழி மாறத் துவங்கியது. மொழிக்குக் கிடைத்த இத்தகைய வளமையினால் தான். பாமரனுக்கும் ஒரு மொழி ஆளுமை ஏற்பட இயக்கம் உதவியது.

மக்கள் நீண்ட தூரம் நடந்து வந்து மேடைப்பேச்சில் ஆர்வம் காட்டினர். "வாழ்க திராவிட நாடு! வாழ்க திராவிடம் வாழ்கவே" என்ற பாட்டைக் கேட்கும் போதெல்லாம் கலைகள் நிறைந்த ஒரு புதிய சமுதாயம் பற்றிய கற்பனைகள் கிளர்ந்தெழுந்தன. `காவிரி, வைகை, தாமிரபரணி களிப்புடன் வாழ்ந்திடும் நாடு' என்று பாடும்போது கற்பனைகளும் உணர்ச்சிகளும் பெருகின. பேச்சு, பாடல் என்றில்லாமல் படிப்பதிலும் ஒரு ஆர்வத்தைத் திராவிட இயக்கங்கள் உருவாக்கின. பெரியார் விடுதலையில் எழுதிய தலையங்கங்களும், அண்ணா திராவிட நாட்டில் எழுதிய கட்டுரைகளும் கட்டுரைத் தமிழுக்கு செறிவையும் கூர்மையையும் அளித்தன. இந்தக் காலக்கட்டத்தில் தோன்றியப் பத்திரிகை ஈடுபாட்டிற்கு இணையாக வேறு எந்தக் காலக்கட்டத்தையும் குறிப்பிட முடியாது. ஒவ்வொரு தெருவிலும் திராவிடத் தலைவர்கள் பெயரில் மன்றங்கள் அமைக்கப்பட்டு பத்திரிகைகள் படிப்பதற்கு கிடைத்தன. விடுதலை, நம்நாடு, மாலைமணி போன்ற பத்திரிகைகளைப் படிக்கவும் விவாதிக்கவும் மன்றங்களில் பலர் கூடினர். பல பேச்சாளர்கள் உருவாயினர். அதிகம் படிக்காத ஆள்கூட தன்னுடைய கருத்தைத் தெளிவாக எடுத்துச் சொல்வதற்கான பயிற்சியை திராவிட இயக்கம் அளித்தது. படிப்பதும், எழுதுவதும் புலவர்கள் கையிலிருந்து சமூக செயல்பாட்டில் ஈடுபடுவோர் கைக்கு மாறியது. தமிழ் உரைநடையில் செறிவு, கூர்மை, சமூக விமர்சனம் ஆகிய போக்குகள் உருவாகி அதைப் பரவலாக தமிழ் மக்கள் தங்கள் சமூக வாழ்வில் உபயோகிப்பதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.

நானும் மாணவப் பருவத்தில் திராவிட இயக்கத்துடன் ஒரு உணர்வுபூர்வமான ஈடுபாடு கொண்டிருந்தேன். கூட்டம் கூட்டமாக நாங்கள் மைதானங்களிலும் தெரு முனைகளிலும் கூடிப் பேசுவோம். 1962 இல் சீனப் படையெடுப்பின் போது திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்தில் பேசுவதற்கு அண்ணா வந்திருந்தார். மறுநாள் பரீட்சையையும் பொருட்படுத்தாமல் நாங்கள் கூட்டத்துக்குப் போனோம். பார்த்தால் எங்கள் தலைமை ஆசிரியர் முன்னே உட்கார்ந்திருந்தார். ஒரு கணத்தில் எல்லோரும் சமமான உணர்ச்சி உடையவர்களாகிவிட்டோம். ஒரு பொறி பறந்தது போன்ற உணர்வு எல்லோரையும் பீடித்திருந்தது. பெரியாரின் தொண்டரான ஒரு சவரத் தொழிலாளி அப்போது எங்களுக்கு நண்பராக இருந்தார். சாக்ரடீஸ், மார்க்ஸ், ஏங்கல்ஸ் பற்றியெல்லாம் அவர்தான் எங்களுக்கு நிறைய தகவல்கள் தெரிவித்தார். ஒரு பாமரனுக்குக் கூட அவனுடைய அறிவுத்தாகத்திற்குரிய வடிகாலும், சமூக இருப்புக்குரிய அர்த்தமும் திராவிட இயக்கத்தில் கிடைத்தது.

சமூக விமர்சனத்தை தம்முடைய இயக்கத்தின் அடிப்படையாகக் கொண்டதால் எந்த விஷயமும் விமர்சனத்துக்கு உரியது. யாரும் விமர்சனம் செய்யமுடியும், தாய்மொழியிலேயே சிந்தித்து சிறப்பான கருத்துக்களை வெளியிட முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கியது திராவிடர் இயக்கம். இவை நாடகங்களில் வெளிப்பட்டபோது அதிகமான எழுச்சியையும் உணர்ச்சி வேகத்தையும் எழுப்பின. அப்போது நாடகங்கள் படிப்பதற்காக எழுதப்படவில்லை. காட்சி அமைப்பு, பாடல்கள், நடனங்கள் இவைகளைச் சிறப்பாக அமைப்பதிலேயே நாடகக்காரர்களின் கவனம் இருந்தது. பாட்டுகளின் பலமே நாடகங்களின் உயிர்நாடியாக இருந்தது. இந்தப் பாட்டுகளின் ஆதிக்கத்தை ஆரம்பக் காலத்திரைப்படங்களிலும் பார்க்கலாம். இதனால் குரல்வளம் பெற்றவர்களைத் தவிர யாரும் நடிகனாவதைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. தமிழ் மேடையின் முதன்முதலாகக் கருத்து ஆதிக்கம் ஏற்பட்டது திராவிடர் இயக்க நாடகங்களில் தான். அண்ணாவின் ஓர் இரவு, நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், வேலைக்காரி, சந்திரோதயம் ஆகிய நாடகங்கள் இதுவரை இருந்த நாடகத்தின் கட்டுமானத்தை மாற்றின. இந்த நூற்றாண்டின் சிறப்பான நாடகக்காரர்களாக விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல்சம்பந்த முதலியார் போன்றவர்கள்கூட கருத்துக்களைவிட தொழில் நுட்பத்தில் தான் அதிக ஈடுபாடு கட்டினர். சிறப்பான நடிப்புப் பயிற்சி, ஒழுங்கு முறை இவற்றின் மூலமாகவே நாடகங்களுக்கு ஒரு மதிப்பையும் மக்கள் ஈடுபாட்டையும் உருவாக்கி இருந்தனர்.

திராவிட இயக்க நாடகங்கள
- வெளி ரங்கராஜன்

அண்ணா, கருணாநிதி போன்ற தி.மு.க. தலைவர்களின் நாடகங்கள் பிராமணியத்தை அடித்து நொறுக்குவது, புராண மதிப்பீடுகளைக் கேலிசெய்வது, சமூக பேதங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புவது என்ற நிலையில் அந்த உணர்ச்சிகளின் வெளிப்பாட்டு வடிவங்களாகவே அமைந்தன. அண்ணாவின் சந்திரரோதயம் நாடகத்தில் வரும் உரையாடலைப் பாருங்கள். கோவில் வாசலில் உரையாடல் நடக்கிறது.


வாஞ்சிநாத சாஸ்திரி : இன்னைக்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையினு பேசுவாங்க. ஜாதி இல்லை - ஆசாரம் இல்லையினு பேசுவாங்க. பேசிட்டா போதுமா? நாய்க்கருக்கும் முதலியாருக்கும் என்ன வித்தியாசம். இப்படிப் பேசுறவனுக நாளைக்கு பணக்காரன் ஏது ஏழை எதுன்னு கூட பேசுவானுங்க. நான் எதுக்குச் சொல்றேன்னா நாளை கட்டுக்குலைஞ்சிரும்னு சொல்ல வர்றேன்.

சிங்காரவேலர் : ஆமா. ஐயரு சொல்றதும் சரிதான். (பின்னால் மாறு வேஷத்துடன் இருந்த துரைராஜ் இதைக் கேட்டுவிட்டு)

துரைராஜ் : எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டியதுதான்.

வாஞ் : இது என்ன ரஷ்யாவா?

துரை : அங்கே கூட முன்பு இருந்தார்கள் உங்களைப் போன்றோர். அவர்களை அழித்து ஒழித்துவிட்டது காலம்.

வாஞ் : இங்கே அது நடக்காது.

துரை : ஏன்? ரஷ்யாவில் ஏது தலைவிதி என்று பாடினானே அவனைப் பாருங்கள். அவன் உடலிலே பூராவும் புண்ணாக இருக்கிறது. உள்ளே கோவிலில் ஆண்டவன் உருவாகியிருக்கிறானே, அவர்தானே இவனையும் படைத்தது? உம்மையும் படைத்தது? உமக்கும் இவனுக்கும் ஏன் இவ்வளவு வேற்றுமை!

வாஞ் : அது அவன் விதி!

துரை : விளங்கக் கூறத் தெரியாததற்கு விதி என்று சுட்டிக் காட்டினால் அதை மக்கள் ஏற்கும் காலம் மாறி வருகிறது.

பிச்சைக்காரன் : ஐயா! ஆளுக்கொரு காலணா போட்டா இந்த ஏழை வயிற்றுப் பசிக்கு ஒரு வேளை சாப்பாடாகும் சாமி.

சிங் : சேச்சே! இந்தப் பிச்சைக்காரங்க தொந்தரவு ரொம்ப ஜாஸ்தியாப் போச்சு. இவனுகளுக்கு ஒரு சத்திரம் சாவடி கட்டிப்போடணும். டேய்! போடா இது கோயிலு.

வாஞ் : முதலியார்வாள்! ஜெர்மனியிலே பிச்சைக்காரர்களை என்ன செய்யறா தெரியுமா? சுட்டுத் தள்ளிடுவா.

துரை : என்ன கல் நெஞ்சமய்யா உனக்கு! இந்த ஏழையும் மனிதன் தானே உம்மைப்போல. அன்பே சிவம், சிவமே அன்பு என்று பேசுகிறீர்கள். ஏழையைக் கண்டால் சுட்டுத்தள்ள வேண்டுமென்கிறீர்களே. அந்த ஏழைக்கும் ஒரு காலம் வரும், அந்த உலர்ந்த உதடுகளிலிருந்து உக்கிரம் பிறக்கும், கண்கள் கனலைக் கக்கும், புழுவும் போரிடும், அப்போது உங்கள் செல்வம்,அந்தஸ்து, சாஸ்திரம் யாவும் மண்ணோடு மண்ணாய் போகும். உழைக்கிறான் மாடுபோல் - ஆனால் உண்டு கொழுப்பது நீங்கள். வீட்டைக் கட்டிக் கொடுத்த அவனுக்கு தங்குவதற்கு இடமின்றி வீதியிலே விழுந்து கிடக்கிறான். அவன் இடுப்பிலே உடுத்திருப்பது கந்தல். ஆனால் உள்ளே ஆலயத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஆண்டவனுக்கு பட்டு பீதாம்பரம் எதற்காக? அவன் குடியிருப்பதற்கு இவ்வளவு பெரிய மண்டபம். எதற்காக? அதே நேரத்தில் நீர் பட்டு மெத்தையிலே கொசு வலைக்கு ஊடே துயிலுவதை காண்கிறேன். அவன் உள்ளம் கொதிக்காதா? ஆண்டவன் படைப்பில் ஏன் இந்த ஏற்றத் தாழ்வு என்ற வினா அவனுக்கு எழாதா? எழுந்தால் உங்களைப் போன்றோரது நிலை என்னவாகும் என்பதை அறிந்து திருந்திடுங்கள், இல்லையேல். . .


இப்படி பல்வேறு வகையான கருத்து மோதல்களை அண்ணாவின் நாடகங்களில் பரவலாக காணலாம். நாடகங்களை தூரத்தில் இருந்து பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் சக மனிதனின் பிரச்சினைகளைப் பேசி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியவை திராவிடர் இயக்க நாடகங்கள். கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள தூரத்தை அவை குறைத்தன. எளிய சமூக உணர்வுகளும் பகுத்தறிவு வாதங்களும் கருத்துப் போராட்டங்களும் கூட நாடகமேடையை அலங்கரிக்க முடியும் என்பதற்கு அவை நிரூபணமாக இருந்தன. அண்ணாவைப் பின்பற்றி கருணாநிதி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சி.பி. சிற்றரசு போன்ற பல நாடக எழுத்தாளர்கள் உருவாயினர். ஆனால் சமூக விமர்சனத்தைத் தவிர இவர்களின் நாடகங்களில் அதிக கற்பனையோ, கலைநயமோ இல்லை. ஆனால், அண்ணாவிடம் ஒருவிதமான பல்நோக்கு பார்வை இருந்தது. இரு வேறுபட்ட இலக்குகள் இருந்தன. லெனினை கொலை செய்ய நிலவிய ஒரு சதி பற்றி `துரோகி கப்லான்' என்ற நாடகமாக எழுதினார். ரொம்பவும் திட்டமானதாகவும் கூர்மையாகவும் இருந்தது அந்த நாடகம். சுய சிந்தனையைக் கூண்டில் நிறுத்தி எதிரிகள் வழக்காடுவதாக `ஜனநாயக சர்வாதிகாரி' என்ற நாடகம் எழுதினார். இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை காங்கிரஸ் அனுமதிப்பதாக உருவக பாணியில் `சகவாச தோசம்' என்ற நாடகத்தை எழுதினார். பெரும்பாலான நாடகங்கள் நேரடித் தன்மை கொண்டிருந்தாலும் ஒரு விஸ்தீரமும் விசாரணையும் அவருடைய நாடகங்களில் பிரதானமாக இருந்தன. அந்தச் சூழ்நிலைக்கு அது தேவையானதாக இருந்து பல வேலைகளைச் செய்தது. சீர்திருத்தம், வர்ணாசிரம எதிர்ப்பு ஆகிய விஷயங்கள் நாடகம், மேடை என்று மட்டுமில்லாமல் பலவிதமான கலை வடிவங்களின் சாரப் பொருளாக அமைந்தது. சினிமாவாகவும் அது விரிவடைந்தது.


திராவிட இயக்க நாடகங்கள
- வெளி ரங்கராஜன்

வசனங்களைத் தெளிவாகவும் உணர்ச்சியுடனும் பேசக் கூடிய பாணி உருவாகியது. கே.ஆர். ராமசாமி, டி.வி. நாராயண சாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன் என்று ஒரு குறிப்பிட்ட பாணி நடிகர்களை இந்த நாடகங்கள் உருவாக்கின.

இதே இயக்கப் பின்னணியில் ஆனால் வேறொரு பாணியைப் பின்பற்றி வளர்ந்தவர் என்.எஸ். கிருஷ்ணன். அண்ணா ஒரு ஞாnடிஅnடிn என்றால், என்.எஸ். கிருஷ்ணன் வேறொரு ஞாnடிஅnடிn. அவரிடம் கலையம்சமும் கருத்துக்களை சரியாகப் புகுத்தும் லாவகமும் எல்லோரும் ரசிக்கும்படியான நயமான தன்மையும் இருந்தன. அண்ணா மற்றும் முன்னணி எழுத்தாளர்களுடைய நாடகங்கள் சாடுதலையே நோக்கமாகக் கொண்டவை என்றால் என்.எஸ். கிருஷ்ணன் நயமான நகைச்சுவை மூலம் சமூக விமர்சனக் கருத்துக்களை வழங்கினார். அவருடைய நல்லதம்பி இதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு. பகுத்தறிவுப் பாதையையும், காந்தியத்தையும் அரவணைத்துக் கொண்டு செல்வதைப் போன்ற ஒரு போக்கை அவர் மேற்கொண்டார். வேதம், புராணம், பக்தி என்ற பிராம்மணக் கலாச்சாரத்துக்கு மாற்றாக எளிமை, மனிதாபிமானம், சமத்துவம் கொண்ட புதிய தமிழ்க் கலாச்சாரத்துக்கு - மக்கள் கலாச்சாரத்துக்கு என்.எஸ். கிருஷ்ணன் ஆதாரமாக இருந்தார். பிரம்மணியக் கலாச்சாரத்திற்கு மாற்றான தமிழ்க் கலாச்சாரம் பற்றிய குழப்பத்தில் திராவிடர் இயக்கம் இருந்தபோது ஒரு தெளிவான நாட்டுப்புறத்தன்மை கொண்ட மக்கள் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்தவர் என்.எஸ். கிருஷ்ணன். இந்த வகையில் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் பாடிய பல பாடல்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. அவருடைய `கிந்தனார்' நாடகம் சமூக அங்கதத்துக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு.

எம்.ஆர். ராதா உருவகப்படுத்திய ஒரு கலகப் பண்பாடு திராவிடர் இயக்கத்தின் இன்னொரு முக்கியமான போக்கு. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக மேடைக்கு ஒரு புதிய அழுத்தத்தை உருவாக்கியவர் அவர். தமிழில் முதன்முதலில் தடை செய்யப்பட்டவை எம்.ஆர். ராதாவின் நாடகங்களே. அந்த அளவுக்கு ஒரு கலகக்கார நாடகக்காரராக அவர் விளங்கினார். மிகவும் உண்மையானதும் கசப்புமான யதார்த்தங்களை அவர் எடுத்துக் கூறினார். ராமாயணப் பாத்திரங்களை கேலி செய்து அவர் எழுதிய கீமாயணம் நாடகம் தடை செய்யப்பட்டது. தடையை மீறி திருச்சி தேவர் ஹாலில் அந்த நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார். நாடக மேடையில் ஒருவிதமான பரிசுத்த நாயகர்களையே காட்டிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தறிகெட்டு அலையும் ஒருவனை நாயகனாக்கி `ரத்தக் கண்ணீரை' உருவாக்கினார். ரத்தக் கண்ணீர் நாடகம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் நிகழ்த்தப்பட்டது. பெரியாரின் கருத்துக்களுக்கு நாடக வடிவம் கொடுத்து தமிழ்நாடு முழுவதும் சுயமரியாதை பிரச்சாரத்திற்கு ஒரு மதிப்பை அளித்தவர் எம்.ஆர். ராதா. எம்.ஆர். ராதாவைப் பின்பற்றி திருவாரூர் தங்கராசு போன்றவர்களும் நாடகங்கள் நிகழ்த்தினர். என்.எஸ். கிருஷ்ணனின் கலை அம்சத்தையும், எம்.ஆர். ராதாவின் கலகப் பண்பாட்டையும்பின்பற்றி பலர் உருவாகாதது திராவிட இயக்கத்தின் ஒரு பெரிய குறைபாடு.

தமிழ்நாட்டில் தங்கள் நாடகங்களுக்காக பல அடக்கு முறைகளை எதிர் கொண்டவர்கள் திராவிட இயக்கத்தினர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாடகத்தில் தேசிய இயக்கப் பாடல்களைப் பாடியதற்காக பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சுதந்திர இந்தியாவில் நாடகங்கள் தடை செய்யப்பட்டதும், அடக்குமுறை ஏவிவிடப்பட்டதும் திராவிடர் இயக்க நாடகங்களுக்கே நேர்ந்தது. அண்ணா, கருணாநிதி போன்ற பல தலைவர்கள் தங்கள் எழுத்துக்களுக்காக சிறைத் தண்டனை ஏற்றனர்.

இந்த நாடக உணர்வை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல திராவிட இயக்கம் தவறிவிட்டது. சக மனிதனை முதன்மைப் படுத்துதல், சமூக யதார்த்தம் பற்றிய விமர்சனப் பார்வை ஆகியவை பல்வேறுபட்ட இலக்கியப் போக்குகளை உருவாக்கி இருக்க முடியும். ஆனால், தி.மு.க. அரசியலில் தீவிரமாகப் பங்கெடுக்க ஆரம்பித்ததுமே அதன் கலை, இலக்கியக் கண்ணோட்டத்திலும், சமூக விமர்சனப் பார்வையிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. பகுத்தறிவுக் கருத்துக்களின் பின்னணியில் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க எழுந்த இயக்க பிராமணியத்துக்கு மாற்றான ஒரு புதிய சமூக ஆக்கத்துக்கான கருத்துக்களில் தெளிவற்றுப் போக ஆரம்பித்தது. பிரம்மணியத்துக்கு மாற்றாக சங்க காலத் தமிழர்களின் காதல், வீரம் கலந்த பண்பாட்டை முன் நிறுத்தியது. சங்கத் தமிழ் புதிய வடிவங்களில் புத்துயிர் பெற்றது, எதிர்காலச் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய ஒரு இயக்கம் கடந்த காலப் பெருமைகளில் தன்னை இழக்க ஆரம்பித்தது. நம்முடைய வரலாற்றையும் இலக்கியங்களையும் பற்றிய அறிவு நிகழ்காலம் பற்றிய புதிய மதிப்பீடகளுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் விமர்சனமற்று வெறும் கடந்த காலத்தைப் பூஜிப்பது மட்டுமே நிகழ்ந்தது.

பிராமணியத்தை விமர்சித்த திராவிடர் இயக்கம் சங்க காலத்தை விமர்சிக்கவில்லை. பெரியார் மட்டும்தான் எதிர்கால சமுதாயம் பற்றிய கவலை கொண்டவராக இருந்தார். பெரியாருக்குப் பின்னால் வந்தவர்கள் பெரியார் காரியத்தை முன் நிறுத்தவில்லை. தமிழை பிராம்மணியத்திலிருந்து விடுவித்து தமிழ் ஆசிரியர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சங்க காலத்திலிருந்த மீளவே இல்லை. தமிழ் உணர்வு என்பது வெறும் பட்டிமன்றமும் கவியரங்கும், அடுக்கு மொழிப் பேச்சுமானது. கருத்திலிருந்து அழுத்தம் மொழிக்குப் போனதும் அவர்களால் புதிதாக எதுவும் படைக்க முடியாமற் போனது. ஆசாரம், பக்தி என்பதற்கு மாற்றாக அன்பு, சமத்துவம் ஆகியவற்றை முன்நிறுத்த வேண்டியவர்கள் போலித்தனம், கவர்ச்சி இவற்றில் மூழ்கிப் போனார்கள். ஆரம்பகால திராவிட இயக்க உணர்வுகள் நீர்த்துப் போய் சகமனிதனின் வாழ்நிலையும் சமூக யதார்த்தமும் இன்னும் சிரழிவிற்கு உள்ளானது.

தமிழ் சிந்தனாவாதிகள் கற்றுக்கொள்ள நிறைய பாடங்களை திராவிடர் இயக்கம் வழங்கியிருக்கிறது. (1994)

வெப்துனியாவைப் படிக்கவும்