அமெரிக்காவில் ஆல்பெர் காம்யு- ஸெர்ஜ் தூப்ரோஸ்கி

தான் பிறந்த நாடான அல்ஜீரியாவில், காம்யு ஒரு தீர்க்கதரிசியாகக் கருதப்படும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார். எழுத்தாளர் என்று மக்களிடம் புகழ் பெற்றதோ பிரான்சு நாட்டில்தான். பிரான்சைவிட, காம்யு ஒரு தலைசிறந்த அமெரிக்க எழுத்தாளராகவே கருதப்பட்டார். காம்யு உருவாக்கிய கதாபாத்திரங்கள், படைப்புகள் பற்றிய இதுவரை வெளிவராத கருத்துக்கள் அல்லது எதிர்ப்புகள் அட்லாண்டிக் பகுதிக்கு இப்பால் ஏனோ இன்னும் தெரியப்படாமலேயே இருந்தது.

அமெரிக்காவில் காம்யுவின் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு மலிவு விலையில் பேப்பர்பேக் பிரதிகளில் எங்கும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் காம்யுவின் படைப்புகளின் மூலப்பிரதிகளைத் தேடி மாணவர்கள் ஒருவித வேட்கையுடன் அலைந்தவண்ணம் இருந்தனர்.

அமெரிக்காவில் காம்யுவைப் பற்றிய விரிவுரைகள், வகுப்புகள், புத்தகங்கள், கட்டுரைகள் உடனுக்குடன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கவே செய்தன. ஒரு பல்கலைக்கழக எல்லைக்குள்தான் காம்யு புகழ் பெற்றிருந்தார் என்றும் குறைத்துக் கூறிவிட முடியாது. அதனையும் மீறி பண்பாட்டில் ஆர்வம் கொண்ட கூட்டத்திலும், `சூழ்நிலை' யிலும் கூட இவர் பிரபலமடைந்தார்.

அமெரிக்காவின் மற்ற எழுத்தாளர்களும் தம் காலத்து கருத்துகளின் ஏகோபித்த கவனத்தைக் காம்யுவின் வழிக்கே திருப்பிவிட முனைந்தனர். இதுதவிர காம்யுவிற்கென்று சிறப்பாக அமையப் பெற்றது அமெரிக்க மக்கள் இவர் மீது பொழிந்த உளமார்ந்த அன்புதான்.

அமெரிக்காவில் சிந்தனை வயப்பட்ட ஒவ்வொரு மனிதனையும், காம்யுவின் மரணம் ஒரு சொந்த இழப்பாகவே எண்ண வைத்தது. காம்யு இறந்தவுடன் பத்திரிகைகள், தினசரிகளில் வெளிவந்த தலையங்கத்தை வைத்தோ, மரண அறிவிப்புகளை வைத்தோ நான் இதைச் சொல்லவில்லை. பத்திரிகை ஆசிரியர் தொழில், இலக்கியம் முதலியவற்றோடு சம்மந்தமில்லாத பலரும் அழுத கண்களோடு பேராசிரியர்களைக் காண வந்ததை நினைத்தும், காம்யுவின் மரணம் அறிவிக்கப்பட்டவுடன் பல நாட்கள் சாப்பிடாமலேயே இருந்த எனக்குப் பழக்கமான பல மாணவர்களின் உறுதிப்பாட்டினை நினைத்தே நான் இவ்வாறு சொல்கிறேன்.

அமெரிக்க நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், சாதாரணமானவர்கள், அசாதாரணமானவர்கள் ஆகிய இரு பிரிவினரின் பேனா முனைகளிலிருந்தும் காம்யுவைப் பற்றிய கவிதைகள் பிறந்தவண்ணம் இருந்தன. தெய்வப் பிரார்த்தனைக் கூட்டங்கள் அல்லது கண்ணீர்க் கவிதை அஞ்சலிகளில் மட்டுமல்ல, அன்றாட மனித பிதற்றல்களிலும்கூட அமெரிக்கக் கண்டம் முழுமைக்கும் காம்யுவின் மரணம் பற்றிய துன்ப உணர்வுகள் பீறிட்டெழுந்த வண்ணம் இருந்தன.

அமெரிக்காவில் ஆல்பெர் காம்ய
- ஸெர்ஜ் தூப்ரோஸ்கி

அமெரிக்கர்கள் இலக்கியத்தை ஓர் இரண்டாம்பட்சச் செயலாகக் கருதும் இயல்பு கொண்டவர்கள். கலைகளில் சொற்பத் தொடர்பு கொண்டவர்கள் இவர்கள். இந்த அமெரிக்கர்களிடையே வேறு எந்த அன்னிய எழுத்தாளரும் இப்படிப்பட்ட உணர்வுகளை உண்மையில் எழுப்பியிருக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஹேமிங்வேயின் விமான விபத்துச் சம்பவம் கூட யாருடைய கண்களிலிருந்தும் இவ்வளவு கண்ணீரைக் கொண்டு வந்து சேர்க்கவில்லை. ஃபாக்னரின் இறப்பில் கூட ஒரு பேஸ்பால் ஆட்டக்காரனின் பணி ஓய்வு நாளன்று எழும் வருத்தமே காணப்பட்டது. ஆனால் காம்யுவைப் பற்றிய அமெரிக்க மக்களின் தனிப்பட்ட இறுக்கமான உணர்வுகளையும், பிணைப்புகளையும் நாம் விவரிக்கவே இயலாது.

அமெரிக்க இலக்கியம் காத்திருந்து ஏங்கியும் கிடைக்கப் பெறாத ஓர் எழுத்தாளராக காம்யு விளங்கினார். ஃபாக்னர், டாஸ்பஸாஸ், ஹேமிங்வே முதலானோரின் தலைமுறைகள், கடந்த காலத்திற்கும் சரித்திரத்திற்கும் சொந்தமாக்கப்பட்ட நேரம் அது. அவர்களைத் தொடர்ந்து ஒரு சூன்யம் எற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இச்சூழ்நிலையிலும் திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் பலர் நூற்றுக்கணக்கில் அப்போது இருக்கத்தான் செய்தனர். இருப்பினும், அக்காலப் பிரச்னைகளை ஆழமாகச் சிந்தித்த எழுத்தாளர்கள் அமெரிக்காவில் யாரும் இல்லை என்றே கூறிவிடலாம்.

மகிழ்ச்சியால் திளைக்கும் மக்களுக்கு சரித்திரம் ஒன்றும் கைவரப் பெறவில்லை. அதுபோல் முன்னேறும் மக்களுக்கு இலக்கியமும் கிட்டுவதாயில்லை. சமூகவியலாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள் முதலானோர் கூர்ந்து கவனித்து வரும் இந்த இடைவெளியை நிரப்பும் ஆன்ம ஒளியோ, கலை வெளிப்பாடோ இன்னும் ஏன் அமெரிக்காவில் நிகழவே இல்லை என்ற வருத்தம் நிலவியது.

காம்யுவின் மனதோ நியதிவயப்பட்டு உலகளாவித் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் இயல்பினைக் கொண்டது. மனித வாழ்வியலுக்கு அர்த்தங்கள் தருவதன் மூலம் தேசியம் சார்ந்திராத அவனது படிமத்தை உருவாக்குவது காம்யுவுக்குத் தமது நாவல்களில் சாத்தியமாயிருந்தது. இதற்கு மாறுதலாக, போருக்கு முன்னும் பின்னுமுள்ள பிரான்சின் ஆழ்மனதில் வேர்விட்ட அவரது அறிவார்ந்த அணுகுமுறை அமெரிக்கர்களை வெறுப்பூட்டியது அல்லது கவர்ந்தது எனலாம். பொதுவாக சார்த்தர் அமெரிக்கர்களுக்கு அன்னியராகவே தென்பட்டார். காம்யுவோ ஆங்லோ சாக்ஸன் மனப்பான்மை கொண்ட அமெரிக்கர்களுக்குத் தேவையான நியதியைத் தன் இலக்கியம் வாயிலாக வழங்கினார். இந்நியதி வளர்வதற்கான வளமண் அமெரிக்காவில் இருக்கத்தான் செய்தது. வாழ்வை முழுமையாக ஏற்று அதனுடன் ஸ்பரிசிக்கத் தோன்றும் `சூர்ய மகிழ்வு' முதலான காம்யுவின் சிந்தனைத் தெளிவுகள் அமெரிக்கர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது என்று நான் சொல்லவில்லை.

ஹேமிங்வேயைப் போல், மெல்வில்லைப் போல் உலகினை எதிர்த்து நடக்கும் மனிதப் போராட்டம், காம்யுவின் பார்வைகள், `முதியவரும் கடலும்' எனும் நூலுக்குரிய பார்வைகள் முதலானவற்றை அமெரிக்கர்கள் மிகவும் ரசித்தனர். அமெரிக்காவின் ஆன்ம உணர்வுகளை வலியுறுத்துகின்ற மனித நியதிகளை மென்மேலும் விளக்கித் தொடர்ந்தார் காம்யு.

அமெரிக்காவில் ஆல்பெர் காம்ய
- ஸெர்ஜ் தூப்ரோஸ்கி

மேலும், காம்யுவின் இழப்பைத் தொடர்ந்து வெளிப்பட்ட துன்ப உணர்வுகள் அமெரிக்காவின் இதயத்தைத் தொட்டு விட்டது எனலாம். மனிதனுக்கான சொர்க்கத்தை எதிர்த்த `பிளேக்'கின் ஆசிரியரான காம்யுவை சார்த்தர் எதிர்த்தார். இது நாசிச எதிர்ப்புக் கொள்கையை செயலாக்கியது. மனிதாபிமானம் வெற்றி கொள்வதற்காக நடத்தப்படும் போராட்டத்தை இது தடைபடுத்துவதாகவே சார்த்தர் உணர்ந்தார். தன் போக்கில் இயற்கையான வழித்தடங்களை ஏற்படுத்திக் கொண்டு அமெரிக்காவின் உள்ளார்த்தத்தில் பிளேக்கின் நியதி பரவியிருந்தது.

அமெரிக்கச் சமூகத்தில் வகுப்பு மோதல்கள் இல்லை. சமூக அமைப்பை இது ஒருபோதும் சந்தேகத்திற்குள்ளாக்கியதும் இல்லை. கூட்டு அமைப்புகள் உள் பிணக்குகளால் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளவுமில்லை. அன்புள்ளங்கொண்ட மனிதர்கள் தங்களை எதிர்கொள்ளும் தீமையின் முன்பாக ஒன்றாகச் சேர்ந்தனர். முனிசிபல் ஊழல்களும் கொள்ளைகளும் இருந்தாலும் நீக்ரோக்களின் நிலை உயர்த்தப்பட வேண்டிய ஒன்றே என்று எல்லோரும் உணர்ந்திருந்தனர். புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் போக்கடிக்கப் படமாலேயே இருந்தன. பல உருவங்களில் இது பற்றிய போராட்டங்கள் உலகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

காம்யுவைப் பற்றிய புகழாஞ்சலிகளில் அமெரிக்கப் பெண்கவி ஒருத்தி அவரை ஒரு மருத்துவரோடு ஒப்பிட்டது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். காம்யுவின் பிரதிநிதியான ரியா என்பவர் ஒரு மருத்துவர் என்பதால் இவ்வாறு அவள் புகழவில்லை.

காம்யுவிடம் நாம் காணும் மருத்துவ குணம் ஒவ்வொருவரும் உணரப்பட வேண்டிய ஒன்றாகும். தவிர்க்க முடியாத தோல்விகளை மென்மேலும் தாங்கிக் கொள்ளும் தைரியம், மனிதன் மீதுள்ள வாஞ்சை, அவன் மீதுள்ள நம்பிக்கை, மனிதனை நியதி சார்ந்து இயக்குவதில் அவருக்குள்ள அக்கறை - இவற்றில்தான் காம்யுவின் நியதி, அரசியலிலிருந்து தனித்து நிற்கிறது.

காம்யுவின் மனிதாபிமானம் அமெரிக்க குடியரசின் ஆன்ம முகமாகும். மனிதப் போராட்டம் ஒரு தற்காலிகமான வெற்றியோடு முடிந்துவிடுமேயானால், அதனால் சமூகத்தில் எழும் விளைவுகளுக்கு உயிரும் உடலும் கொடுக்க அமெரிக்க எழுத்தாளர்கள் காத்திருந்தனர். ஹேமிங்வேயும் ஃபாக்னரும் அமைதியாய் இருந்தவர்கள் பற்றிப் பேசினார்கள். காம்யுவும் இவ்வழியைத் தொடர்ந்தார். நாட்டிற்கும் எழுத்தாளர்களுக்கும் இருந்த ஒரு தொடர்பற்ற நிலைக்குக் காரணம் நமது தேசத்தவர்களுக்கு எதிரான எண்ணங்களை எழுத்தாளர்கள் வெளிப்படுத்தினார்கள் என்பதல்ல. மாறாக, தேசத்தவர்கள் தாம் ஒளிந்து கொள்ள நினைக்கும் எண்ணங்களை எழுத்தாளர்கள் வெளிப்படுத்தவே செய்தனர். காம்யுவின் படைப்புகள் இவற்றை உறுதிப்படுத்தின.

அமெரிக்காவில் ஆல்பெர் காம்ய
- ஸெர்ஜ் தூப்ரோஸ்கி

அமெரிக்காவில் மதம் என்பது ஒவ்வொரு பொது நிகழ்ச்சியிலும் தவிர்க்க இயலாததாய் இருந்தது. நற்பண்பின் அடையாளமாகவும் இருந்தது. இவ்வளவில் எழுத்தாளர்களில் பலபேர் கடவுளைப் பற்றிக் கவலை கொள்ளாதவர்களாகவும், நாஸ்திகர்களாகவும் இருந்தது ஒரு முரண்பாடே. எல்லா இடங்களிலும் காணப்படும் விளம்பரப் பலகைகளிலும், இயக்கங்களிலும் எவ்வகைச் சூழ்நிலையிலும் பக்தி ரசத்தை ஒவ்வொருவரும் சந்தித்த போதிலும் அமெரிக்க நாடு உலகத்தில் மிகக் குறைந்தபட்ச மதச் சார்புடைய நாடாகவே விளங்குகிறது. இதுவே அதன் வலிமைக்குக் காரணம்.

அமெரிக்கர்கள் உலகை நோக்கியவர்கள். மனிதனுக்கான உலகை ஒரு படைப்புத் தளமாகவும் ஆக்கியவர்கள். இவர்களது நாஸ்திக மனப்பான்மைதான் இதற்கான காரணமாகும். பக்தி ஓர் ஏமாற்று வேலையாகும் நேரங்களில் மதச் சார்பின்மை நியதிகளை பட்டவர்த்தனமாக்குவதற்கென்றே அமெரிக்காவில் ஒரு சிலர் இருக்கத்தான் செய்தனர். அநாச்சாரமாய் தோன்றும் இவ்வுண்மைகளை வெளியிடுபவர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கித்தான் ஆக வேண்டும்.

பிரான்சின் குடிமகனாய் இருந்து கொண்டே அமெரிக்காவில் மற்றவர்கள் கூறிட நடுங்கியதை காம்யு தைரியமாக எடுத்துக் கூறினார். நல்லவேளை எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

- - - - - - - - - - - - - - - - - - - -

ஸெர்ஜ் தூப்ரோஸ்கி என்ற காம்யு விமர்கரால் பிரெஞ்சு மொழியில் காம்யு நினைவாக எழுதப்பட்ட கட்டுரை இது. காம்யு என்ற புத்தகத்திற்காக ஜெர்மேன் ப்ரீ என்பவரால் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டது.

நன்றி : ஸெர்ஜ் தூப்ரோஸ்கி
தமிழில் : தேனுக
தொகுப்பு : மதிநிலையம

வெப்துனியாவைப் படிக்கவும்