என் தலைமுறையின் பலரைப் போலவே நானும் டார்ஸான், ஃப்ளேஷ் கார்டன், கௌபாய்ஸும் இந்தியர்களும் முதலிய சினிமா உணவுகள் மூலம் வளர்க்கப்பட்டேன். சிறுவயதில் அவைகள் எனக்கு முழுதும் நியாயமானவைகளாகவே பட்டன. டார்ஸான் தான் ஆதி குடிகள் குழுவின் ஏகமனதான தலைவன், ஃப்ளேஷ் கார்டன் நிச்சயம் ஈவிரக்கமற்ற மிங்கை முறியடிக்க வேண்டும், கௌபாய்ஸ் தான் இந்தியர்களை (செவ்விந்தியர்களை) நாகரீகமாக்க வந்தவர்கள் என்றெல்லாம் எண்ணினேன். அந்தப் படங்கள் ஏற்படுத்திய மனத்துடிப்பு, பிரமிக்கத்தக்க சிறப்புக் காட்சிகள், என்னைத் திகைப்புக்குள்ளாக்க நான் அவற்றை நேசிக்கத் தொடங்கினேன். சில வருடங்களுக்குப் பின் அரசியல் பிரக்ஞையுள்ள (அப்படி நம்புகின்றேன்) ஒரு இளைஞனாக அதே படங்களைத் திரும்பப் பார்த்த போது - ஒரு முக்கிய உண்மை என்னைத் தாக்கியது. எந்த இடத்திலும் கறுப்பு முகங்கள் இல்லை. கூட்டங்களிலும் சரி, தெருக்காட்சிகளிலும் சரி - அந்தக் காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டிருந்தால் ஒழிய அமெரிக்கா முழுவதுமே கறுப்பர்கள் யாருமில்லாதது போல் காட்சியளித்தது. ஹிட்ச்காக் ஒரு உடனடி உதாரணம். அவர் படங்களில் எங்கும் கறுப்பர்கள் கிடையாது. சப்வேக்களில் எடுக்கப்பட்ட காட்சிகளில் கூட, இப்போது எனக்குள் இரண்டு கேள்விகள் எழுந்தன. 1) கறுப்பர்கள் முக்கியத்துவமற்று கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு அவர்களது இருப்பே இல்லாமல் ஒரு தனிப்பட்ட குழுவாக்கப்பட்டு வெகுவான படங்களில் காட்டப்படுவதற்கு எத்தொடர்பு காணரம்? 2) இத்தகைய நிலை சினிமாவில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தியது, ஏற்படுத்தக்கூடும் என்பன அவை.
முதல் கேள்விக்கு விடை - இனவாதம்
இக்கட்டுரை மேற்கண்ட இரு கேள்விகளுக்கு விடை தர முயற்சிக்கிறது. இட வசதி கருதி ஹாலிவுட் திரைப்படங்களில் கறுப்பர்கள் எப்படி நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றியே நான் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இனவாதத்தின் நான்கு முக்கிய அடிப்படைகள் 1) சநாதன ஆட்சி அமைப்பு 2) உயிரியல் 3) உயிர்களின் மாறாத தன்மை 4) மரபுத் தொடர்ச்சி.
இவைகளை மாற்ற முடியாது என்கிற வாதத்தின் மீது இனவாத சமூக நிறுவனங்கள், கூட்டமைப்புகள், சமூகப் பண்புகள் முதலியன எழுப்பப்பட்டு, இவை ஒரு குறிப்பிட்ட தனி நபர், குழு அல்லது இனம் மற்றொரு இனத்தை பொருளாதார, சமூக, பாலியல் வழிகளில் அடக்கியாளவும், சுரண்டிப் பலவிதங்களில் பயன் பெறவும் உபயோகிக்கப்பட்டன.
மேலே கூறப்பட்ட இனவாத அடிப்படைகள் நான்கைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஹாலிவுட் திரைப்படங்களின் இனவாத பிம்பங்கள்
1) சநாதன ஆட்சி அமைப்பு - பிற இனங்களின் மதிப்பீடுகளைத் தாழ்ந்தவை என்று மதிப்பீட்டு தன்னை உயர்த்திக் கொள்வதன் மூலம் பிற இனங்களுக்கு அவற்றிற்கு உரிய இடங்களை வழங்குகிறது.
2) இனவாதக் கருத்துக்கள் அவ்வாறு மனிதர்களுக்கும் பொருள்களுக்கும் மேல் கீழ் ஸ்தானங்களை நிர்ணயம் செய்வது சில குறிப்பிட்ட உயிரியல் காரணிகள் மூலம் எனவே நாம் ஒரு மனிதனின் நிறம், முடியின் நீளம், கண்களில் வெளி மடிப்புகள் உள்ளனவா, இல்லையா, ஒருவனின் மூக்கின் அகலம், உதடுகளின் தன்மையை கவனிக்கிறோம். இவை வெளிப்படையாய்த் தெரியவரும் இனவாதத்தின் முன் முடிவுத் தூண்கள்.
3) மூன்றாவது முக்கியக் கருத்து. "சிறுத்தை தன் புள்ளிகளையும் நிலக்கரி நிறத்தவன் தன் நிறத்தை மாற்றவும் முடியாது (The Leo-pard cannot change his spots nor the nubi an his skin) ஒரு முறை ஒரு குறிப்பிட்ட இடம் தரப்பட்டு விட்டால் அங்கு அம்மனிதன் காலகாலங்களுக்கும் தங்க வேண்டியதுதான். சமூகத்தில் உங்களுக்கு ஏற்படும் ஏற்றங்கள் எதுவும் உங்களது மரபான தகுதிகளை மாற்றி விடுவதில்லை. இந்தப் பழம் வாதம் மனித இயல்பானது - எப்போதும் மாறாததாய் நம் அனைவரது சாரமுமாய் இருக்கிறது.
4) நான்காவது இனவாதக் கட்டமைப்புக்கருத்து - மேல் கூறப்பட்ட மனிதனுடன் பிறந்த தகுதிகள் மனிதப் பிறப்பின் மூலம் தீர்மானமாகும். இவை தலைமுறைக்குத் தலைமுறை தொடர்பானவை. நாம் உயிரியலைத் தாண்டி வர முடியாது என்பது மட்டுமின்றி அது தலைமுறைகளாகத் தொடர்தலையும் தவிர்க்க முடியாது என்றும் இருள் நிலைக்கும் தள்ளப்படுகிறோம்.
சினிமா அதன் ஜனரஞ்சக வடிவத்தில் எப்போதும் இனவாதத் தோற்றங்களையே வெளிகாட்டியிருக்கிறது. கறுப்பர்கள் எப்போதும் கண்களை உருட்டி விழிக்கும் கோழைகள் (ஸ்டீபன் பெட்சிட் - Stephen petchit - வில்லி பெஸ்ட் - Willie Best) இதுபோல் ஏராளமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். அல்லது வன்முறையான காட்டு மிராண்டிகள் - இரண்டு அல்லது மூன்று முறை குடியில் ஆழ்த்தப்பட்டுக் கட்டுக்கு வருபவர்கள். (டார்ஸான் - கிங்காங் திரைப்படங்களிலும் - சொல்ல முடியாத படி BIRTH OF A NATION போன்ற க்ளாஸிகுகளிலும் கூட) அல்லது கௌரவமான, தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டு, சந்தோஷமாய் தன் எஜமானுக்காகவோ எஜமானிக்காகவோ உயிர் துறப்பார்கள் (UNCLE TOM AND INNUMERABLE MUMMIES) ஹாலிவுட்டின் துவக்க காலத்திற்கு அருகிலிருந்தே, கண்ணை உருட்டி விழிக்கும் கோழைப் பாத்திரங்கள் இருந்தன.
ஹாலிவுட் திரைப்படங்களின் இனவாத பிம்பங்கள்
அது மட்டுமல்லாமல் போதைப்பொருள் கடத்துபவர்களாயும், தேவையின்றி உரத்துக் கத்தும் மனிதர்களாயும், பெண்களை வைத்துத் தொழில் செய்பவர்களாயும், வன்முறை, பாலியல் கொடூரங்களைச் செய்பவர்களாயும் சித்தரிக்கப்பட்டார்கள். கறுப்பர்களை வெறும் வலிமையான உடம்புகளாய், குறிகளாய் சித்தரித்தனர். கறுப்பர் இனப்பெண்கள் - சீனக் கல்லறைத் தாழிகள் போலவும், செக்ஸ் வெறி பிடித்த மிருகங்கள் போலவும் - கிரேக்க நாட்டு மலர்க் குவளைகள் போலவும் சித்தரிக்கப்பட்டனர். அத்துடன் அறிவற்ற ஜந்துக்களாயும் - பாலுறவுத் திருப்தியில் மட்டும் நாட்டமுள்ளவர்களாயுமே காட்டப்பட்டனர்.
கறுப்பர் இனப்பெண்கள் இருவிதங்களில் பாதிக்கப்பட்டனர் - கறுப்பர்களாய் இருப்பதாலும் - பெண்களாயிருப்பதாலும் "வைல்ட்கீஸ்" (The Wild Geese" - 1978-D : Andrew V.Mclagen) திரைப்படத்தில் ஒரு வெள்ளைக் கூலிப்படைக்குழு இடையில் ஒரு கறுப்பன்-இவர்கள் ஒரு "நல்ல" ஆப்பிரிக்கனை ஒரு கறுப்புச் சர்வாதிகாரியின் பிடிகளிலிருந்து விடுவிக்க முயற்சிக்கிறார்கள். அந்த "நல்ல" அரசியல்வாதி சிக்னிபாக்டரின் பாத்திரத் தொனியுடன் பொறுமையாகவும், ஒற்றுமை பற்றியும் மன்னிக்கும் தன்மையுடன் பேசுகிறான். வெள்ளையர்கள் கறுப்பர்களின் தற்கால நிலையைப் பொறுத்துக் கொண்டு மன்னித்து விடவும் - கறுப்பர்கள் - வெள்ளையர்களின் கடந்த கால நடத்தைகளையும் மன்னித்துவிட வேண்டும் (என்கிற தொனியுடன்).
ஒரு சில நூற்றாண்டுகளின் இனவாதம் / காலனியாதிக்கம் இவ்வாறு அழிக்கப்படுவதுடன் மட்டுமல்லாது தற்போதைய ஆப்பிரிக்காவில் கறுப்பர்கள் கொல்லப்படுவதும் நாகரீகமாக அழிக்கப்படுகிறது.
திரைப்படங்கள் என்பது திரையில் நகரும் பிம்பங்கள் மட்டுமல்ல, அவை பார்வையாளரையும் பிரமிக்கதக்க விதத்தில் ஒரு குறிப்பிட்ட கருத்தை நோக்கி நகர்த்த வல்லவை. ஆனாலும் நாம் சினிமா உருவாக்கும் "மாய யதார்த்தத்தை" அதிகம் மதிப்பிடக்கூடாது. நாம் அதனால் எவ்வளவு கவரப்பட்டாலும் - நாம் ஆறுவயதினராயிருந்துவிட்டால் ஒழிய சூப்பர்மேன் பிறப்பதையோ ஜேம்ஸ்பாண்டின் எல்லாம் வல்ல கடவுள் தன்மையையோ தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. இனவாத பிம்பங்கள் பற்றிய சோகமான உண்மை என்னவெனில் - அவை சமூகத்தில் உள்ளே உறையும் யதார்த்தம் என்பது. அந்த பிம்பங்களை திரையில் அழிப்பது என்பது சமூக வாழ்வில் அவை அழிக்கப்படும் போதே நடைபெறக் கூடியது.